மகனை கொன்றதாக தாய் கைது: சிறுவன் உயிரிழந்தது எப்படி? ஐகோர்ட்டில் டாக்டர் விளக்கம்

சென்னை அம்பத்தூரை சேர்ந்த கார்த்திகேயன், புவனேஸ்வரி. இருவரும் திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ்ந்தனர். புவனேஸ்வரிக்கு ஏற்கனவே ஒருவருடன் திருமணமாகி 4 வயதில் கிஷோர் என்ற மகன் இருந்தான்.;

Update: 2019-07-26 22:15 GMT
சென்னை,

இந்த நிலையில் கிஷோர் மர்மமான முறையில் இறந்தான். மகன் தனக்கு இடையூறாக இருப்பதாக கருதி அவனை தாய் புவனேஸ்வரியே அடித்துக்கொலை செய்து விட்டதாக கூறி, அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்பு புவனேஸ்வரியையும், கார்த்திகேயனையும் கைது செய்தனர்.

இவர்கள் இருவரும் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், வலது தொடையில் ஏற்பட்ட ரத்தகட்டினால் சிறுவன் கிஷோரின் உயிர் போனதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து சிறுவனின் உடலை பிரேத பரிசோதனை செய்த கீழ்ப்பாக்கம் அரசு டாக்டர் சந்திரசேகரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

இதன்படி, நீதிபதி முன்பு டாக்டர் சந்திரசேகர் நேற்று ஆஜராகி, ‘சிறுவனின் தொடையின் மீது ஏறி மிதித்ததால், தொடை சதை சிதைந்து, ரத்தக்கட்டு ஏற்பட்டுள்ளது. காலில் இருந்து மூளைக்கு செல்லும் நரம்பு பாதிக்கப்பட்டு அவன் இறந்துள்ளான்’ என்று விளக்கம் அளித்தார். இதையடுத்து, அரசு தரப்பில் வக்கீல் பிரபாவதியும், மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.பி.சுரேஷ்குமாரும் ஆஜராகி வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, புவனேஸ்வரிக்கு ஜாமீன் வழங்க மறுத்து அவரது மனுவை தள்ளுபடி செய்தார். கார்த்திகேயனுக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்