சேலத்தில் மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து ஊழியர் பலி

சேலத்தில் மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து மின் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-07-25 21:45 GMT
சேலம், 

ஆத்தூர் அருகே உள்ள காட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் குமார்(வயது 45). இவர் சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக பணியாற்றி வந்தார். பொன்னம்மாபேட்டை பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ஒருவருடைய வீட்டில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் அதை சரிசெய்வதற்காக நேற்று குமார் அங்கு சென்றார். பின்னர் அவர் அந்த பகுதியில் இருந்த மின் கம்பத்தில் ஏறினார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக மின்கம்பத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். அங்கு கிடந்த கல் மீது அவருடைய தலை பலமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் பலியான குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த குமாருக்கு, திலகம் என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

மேலும் செய்திகள்