ரூ.30 லட்சம் போதைப்பொருள் பறிமுதல் : வெளிநாட்டு பெண் கைது

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.30 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தி வந்த வெளிநாட்டு பெண் கைது செய்யப்பட்டார்.;

Update: 2019-07-25 22:20 GMT
மும்பை,

டெல்லி ஹஜ்ரத் நிஜாமுதினில் இருந்து சம்பவத்தன்று ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் திருவனந்தபுரத்திற்கு கிளம்பியது. இந்த ரெயிலில் பயணி ஒருவர் போதைப்பொருள் கடத்தி செல்வதாக கோடா பிரிவு ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ரெயில்வே போலீசார் சாதாரண உடையில் அந்த ரெயிலில் ஏறி சோதனை செய்தனர். அப்போது குளிர்சாதன பெட்டியில் போலீசார் சந்தேகிக்கும் வகையில் வெளிநாட்டுக்கார பெண் ஒருவர் பயணம் செய்தார். இதையடுத்து போலீசார் அவரை தீவிரமாக கண்காணித்தனர்.

பின்னர் ரெயில் பன்வெல் வந்ததும் அந்த பெண் இறங்கினார். அப்போது ரெயில் நிலையத்தில் தயாராக நின்ற மும்பை போதை தடுப்பு பிரிவு போலீசார் பெண்ணை சுற்றி வளைத்தனர். இதையடுத்து பெண் போலீசார் உதவியுடன் அவர் சோதனை செய்யப்பட்டார்.

இதில் அவரின் பையில் தடை செய்யப்பட்ட எபிட்ரைன் என்ற போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார் அந்த பெண்ணை அதிரடியாக கைது செய்தனர்.

விசாரணையில் அவர் தான்சானியா நாட்டை சேர்ந்த சோகரா கிரேஸ் (வயது 26) என்பது தெரியவந்தது. இவர் போதைப்பொருளை யாரிடம் விற்க வந்தார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்