மாங்கல்ய தோஷம் கழிப்பதாக கூறி ரூ.5¼ லட்சம்-10½ பவுன் நகைகள் மோசடி செய்த சாமியார் கைது

மாங்கல்ய தோஷம் கழிப்பதாக கூறி ரூ.5¼ லட்சம், 10½ பவுன் தங்க நகைகளை மோசடி செய்த சாமியாரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-07-25 21:42 GMT
தேனி,

சென்னை குரோம்பேட்டை கணபதிபுரத்தை சேர்ந்த திலகர் மகன் லோஹியா (வயது 52). இவர், மும்பையில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர், தேனியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்தார்.

அப்போது அவர் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும், வரன்கள் வந்துள்ளது தொடர்பாக ஜாதகப் பொருத்தம் பார்க்க வேண்டும் என்றும் கூறினார். இதையடுத்து அவருடைய உறவினர் கூறிய தகவலின் பேரில், தேனி அல்லிநகரம் ஒண்டிவீரன் காலனியை சேர்ந்த வேல்முருகன் (54) என்ற சாமியாரை சந்தித்து ஜாதகம் பார்த்தார்.

ஜாதகத்தை பார்த்தபிறகு, லோஹியாவின் மனைவியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், உடனடியாக பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். இதையடுத்து பரிகாரம் செய்ய அவர் சம்மதம் தெரிவித்தார். இந்த பரிகாரம் செய்வதற்கு ரூ.10 லட்சம் செலவு ஆகும் என்றும், பரிகாரம் செய்யாவிட்டால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்றும் பயம் காட்டியுள்ளார்.

இதனால், அவர் சென்னைக்கு சென்ற பிறகு வேல்முருகனுக்கு வங்கி மூலம் ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் செலுத்தியுள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட அவர், சென்னைக்கு வந்து மாங்கல்ய தோஷம் கழிக்க வேண்டும் என்று கூறினார். இதற்கான ஏற்பாடுகளை சென்னையில் செய்துள்ளனர்.

தேனியில் இருந்து சென்னைக்கு சென்ற வேல்முருகன், தனது கையில் ஒரு மண் கலயத்தை கொண்டு சென்றார். தோஷம் கழிப்பதற்கு அந்த மண் கலயத்துக்குள் அரை பவுன் தாலி, 8 பவுன் தாலிச்செயின், தலா 1 பவுன் எடை கொண்ட 2 மோதிரங்கள் ஆகியவற்றை வைத்து பூஜை செய்தார்.

பூஜை செய்த பின்பு அவற்றை ஆற்றில் விட வேண்டும் என்று கூறி நகைகளை அவர் எடுத்து வந்துவிட்டார். இந்தநிலையில், வேல்முருகன் தன்னை நம்ப வைத்து மோசடி செய்து விட்டதாக லோஹியாவுக்கு தெரியவந்தது.

இதையடுத்து அவர் தனது அண்ணன் சூர்யாவுடன் தேனிக்கு வந்து, வேல்முருகனை சந்தித்து தன்னிடம் வாங்கிய பணம், நகைகளை திருப்பி தருமாறு கூறியுள்ளார். ஆனால், அவர் பணம், நகைகளை கொடுக்க மறுத்ததோடு, இனிமேல் அவற்றை கேட்டு வந்தால் குடும்பத்தோடு கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து லோஹியா, தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் செய்தார். இந்த புகார் குறித்து விசாரணை நடத்த தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சாமியார் வேல்முருகனை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்