ஆவுடையார்கோவிலில் டிராக்டர் டிரைவர் அடித்து கொலையா? போலீசார் விசாரணை

ஆவுடையார்கோவிலில் டிராக்டர் டிரைவர் இறந்து கிடந்தார். அவர் மர்மநபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது உள்பட பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-07-25 23:00 GMT
ஆவுடையார்கோவில்,

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா புண்ணியவயல் ஊராட்சியில் உள்ள பழந்தாமரை கிராமத்தை சேர்ந்தவர் வேலு. இவரது மகன் ஆத்மநாதன் (வயது 34). டிராக்டர் டிரைவரான இவர் ஆவுடையார்கோவில் குறிச்சிக்குளம் மாரியம்மன் கோவில் அருகே நேற்று காலையில் தலையில் பலத்த வெட்டுக் காயத்துடன் இறந்து கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகிலா, ஆவுடையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆத்மநாதன் கடந்த 23-ந் தேதி நரிக்குடி கிராமத்திற்கு சென்று அங்கு ராஜேந்திரன் என்பவருடைய டிராக்டரை எடுத்து வந்து, நேற்று முன்தினம் முழுவதும் பன்னியூர் கிராமத்தில் உழுது விட்டு, நேற்று முன்தினம் இரவு ஆவுடையார்கோவில் அய்யப்பன் கோவில் பின்புறம் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தி விட்டு, வந்தது தெரியவந்தது.

கொலையா?

இதையடுத்து போலீசார் ஆத்மநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆத்மநாதன் மர்மநபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டாரா?, அல்லது அந்த வழியாக சென்ற வாகனம் மோதி இறந்தாரா? என்பது உள்பட பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து ஒரு போலீஸ்காரர் கூறுகையில், ஆத்மநாதனை டாஸ்மாக் கடை அருகே உள்ள கருவேல மரத்தின் அருகே வைத்து, மர்மநபர்கள் தாக்கி கொலை செய்து விட்டு, உடலை இழுத்து வந்து, சாலையோரம் போட்டுவிட்டு தப்பி சென்று இருக்கலாம். இருப்பினும் விசாரணைக்கு பின்தான் முழுவிவரம் தெரியவரும் என்றார்.

மேலும் செய்திகள்