வழிப்பறியில் ஈடுபட பதுங்கி இருந்த 7 பேர் கைது
மயிலம் அருகே வழிப்பறியில் ஈடுபட பதுங்கி இருந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 கார்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மயிலம்,
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த செண்டூரில் உள்ள ஒரு கல்குவாரியில் சிலர் 3 கார்களில் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக மயிலம் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் கல்குவாரிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த 7 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். இதனால் உஷாரான போலீசார் அவர்கள் அனைவரையும் சுற்றி வளைத்து மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் செஞ்சியை அடுத்த பரதன்தாங்கலை சேர்ந்த ரவி மகன் பாலாஜி(வயது 21), திருவம்பட்டை சேர்ந்த சுதாகர் மகன் பிரகாஷ்(20), திருவம்பட்டு நாகராஜ் மகன் அஜித்குமார்(19), சென்னை கிரீம்ஸ் சாலையை சேர்ந்த அருணாசலம்(20), ஸ்டாலின் மகன் சரண்(19), கீழ்மாம்பட்டை சேர்ந்த மணிபாலன் மகன் சரவணன்(19), கல்லடிக்குப்பம் குமார் மகன் பிரகாஷ்(21) ஆகியோர் என்பதும், இவர்கள் அனைவரும் சேர்ந்து சென்னை, திருவள்ளூர் பகுதியில் 2 கார்களை திருடிக் கொண்டு செண்டூருக்கு வந்து பதுங்கி இருந்து, நள்ளிரவு நேரங்களில் தனியாக செல்லும் வாகன ஓட்டிகளை மறித்து வழிப்பறியில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது.
மேலும் நடத்திய விசாரணையில், பாலாஜி, சுதாகர் மகன் பிரகாஷ் ஆகியோர் கடந்த 12-ந்தேதி நள்ளிரவு ஜக்காம்பேட்டையை சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான செல்போன் கடைக்குள் புகுந்து செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து வழிப்பறியில் ஈடுபடுவதற்காக கல்குவாரியில் பதுங்கி இருந்த 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 3 கார்கள் மற்றும் கத்தி, இரும்பு கம்பி போன்ற ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. வழிப்பறி கும்பலை பிடித்த மயிலம் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி ஆகியோர் பாராட்டினர்.