ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் ஒரு அடி உயர்வு

ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் மேலும் ஒரு அடி உயர்ந்துள்ளது.

Update: 2019-07-25 23:00 GMT
பென்னாகரம்,

கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது. நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு 8,000 கனஅடி தண்ணீர் வந்தது. தொடர்ந்து அதே அளவில் காவிரி ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தண்ணீர் வரத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்ய நேற்று 3-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.இந்தநிலையில் நேற்று மாலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 8,100 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதால் இங்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கர்நாடகாவில் இருந்து திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் ஒகேனக்கல் வழியாக கடந்த 23-ந் தேதி காலை மேட்டூர் அணையை வந்தடைந்தது. நீர்வரத்து காரணமாக அணையின் நீர்மட்டம் கடந்த 2 நாட்களாக உயர்ந்து வருகிறது. கடந்த 23-ந் தேதி 39.13 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 40.15 அடியாக உயர்ந்தது. நேற்று காலை மேலும் ஒரு அடி உயர்ந்து 41.15 அடியாக இருந்தது.

அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளில் இருந்து அதிகமாக தண்ணீர் திறக்கப்படும் பட்சத்தில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும். அணையின் நீர்மட்டமும் வேகமாக உயரும்.

மேலும் செய்திகள்