ரூ.240 கோடியில் மீன்பிடித்துறைமுகம் மீனவர்களுடன் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தது

மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மீனவர்களுடன் கருத்து கேட்பு கூட்டம் திருவொற்றியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

Update: 2019-07-25 22:15 GMT
திருவொற்றியூர்,

திருவொற்றியூர் குப்பத்தில் ரூ.240 கோடியில் மீன்பிடித்துறைமுகம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக மீன்வளத்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மீனவர்களுடன் கருத்து கேட்பு கூட்டம் திருவொற்றியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

முன்னதாக சென்னை மாவட்ட கலெக்டர் சீத்தாலட்சுமி, மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் இந்திராகாந்தி மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் துறைமுகம் அமையும் இடத்தை பார்வையிட்டனர். பின்னர் கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்றனர்.

இத்திட்டம் குறித்து காணொலிக்காட்சி மூலம் விளக்கப்பட்டது. 51.5 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.240 கோடியில் அமையும் மீன்பிடி துறைமுகத்தில் ஆண்டுக்கு 69 ஆயிரம் டன் மீன்கள் கையாள முடியும். மீன் கையாளும் அரங்குகள், ஏலம் விடும் கூடம், குளிர்பதன கிடங்கு, மின் நிலையம், தொழிலாளர்கள் தங்கும் அறை உள்ளிட்ட 12 வசதிகள் உள்ளன. புதிய துறைமுகத்தில் 200 மீன்பிடிப் படகுகள் உட்பட 800 படகுகள் நிறுத்த முடியும். நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெறுவர். சுற்றுச் சூழல் மேலாண்மை தனிப் பிரிவு அமைக்கப்படும் என தெளிவாக விளக்கப்பட்டது.

கூட்டத்தில் கலந்து கொண்ட மீனவ கிராம பிரதிநிதிகள் இந்த திட்டப்பணிகளை வெகுவாக வரவேற்றனர்.

மேலும் செய்திகள்