காரைக்கால் மாவட்டத்தில் குளங்கள் தூர்வாருவதை மேலும் தீவிரப்படுத்தவேண்டும் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் வலியுறுத்தல்

காரைக்கால் மாவட்டத்தில், குளங்கள் தூர்வாருவதை மேலும் தீவிரப்படுத்தவேண்டும் என, மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2019-07-24 23:57 GMT
காரைக்கால்,

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள குளங்கள், ஆறுகள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாருதல், தண்ணீரை சேமித்தல், பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளில் அரசுத்துறை மற்றும் பொதுமக்கள் தாங்களாக முன்வந்து ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என, மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா அண்மையில் அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர்நிலைகள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

அதன் அடுத்தகட்டமாக, இதனை மேலும் தீவிரப்படுத்த அரசுத் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் காரைக்காலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட துணை கலெக்டர் ஆதர்ஷ் (வருவாய்) துணை ஆட்சியர் பாஸ்கரன் (பேரிடர் மேலாண்மை), பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளர் சுரேஷ், செயற்பொறியாளர் பழனி, வட்டார வளர்ச்சி அதிகாரி பிரேமா, நகராட்சி ஆணையர் சுபாஷ், அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், கலெக்டர் விக்ராந்த்ராஜா பேசியதாவது:-

காரைக்கால் மாவட்ட நீர்நிலைகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்ட குளங்கள் கண்டறியப்பட்டுள்ளது. பல குளங்கள் ஆக்கிரமிப்பு, கழிவுப் பொருள்களால் மறைந்திருக்கின்றன. இவற்றை மீட்டெடுக்கவேண்டியது மிக அவசியம்.

மாவட்டத்தில் அரசுத் துறைகள், கோவில் நிர்வாகங்கள் என அவரவர்கள் சார்பில் குளங்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகின்றது. இப்பணியை மேலும் தீவிரப்படுத்தவேண்டும். அனைத்து குளங்களையும், ஆறுகளையும் புகைப்படம் எடுத்து காரைக்கால் அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். சீரமைக்கப்பட்ட பின்னர் அதையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

குறிப்பாக, பல ஆண்டுகளாக தூர்வாராத ஏரிகள், குளங்களை தூர்வாரவேண்டும். இதற்கு பொதுமக்கள், தொழிற்சாலையினர், வணிகர்கள், ரோட்டரி, லயன்ஸ் போன்ற அமைப்புகளும், இளைஞர் சங்கத்தினரும் ஒத்துழைக்க வேண்டும். குளங்கள் தூர்வாரும்போது தண்ணீர் வரும் வழி, வெளியேறும் வழியை முறைப்படுத்த வேண்டும். குளங்களை, வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டவுடன் அந்தந்த பகுதி கல்லூரி மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் உள்ளிட்ட குழு அமைத்து பாதுகாக்க வேண்டும். இதை நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஒருங்கிணைந்து செயல்படுத்தவேண்டும். கிராம பாதுகாப்புக் குழுக்களாகவும் அமைக்க வேண்டும். முக்கியமாக, இப்பணிகள் அனைத்தையும் அரசுத் துறையினர் நாள்தோறும் அலுவலகப் பணியுடன் சேர்த்து செய்யவேண்டும். இப்பணி காரைக்கால் மக்களின் எதிர்கால நலனுக்கு முக்கியமானது என்பதால் அனைவரும் ஒருங்கிணைந்து காரைக்கால் மாவட்டத்தில், குளங்கள் தூர்வாருவதை மேலும் தீவிரப்படுத்தவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்