காங்கிரஸ் விரும்பினால் கூட்டணியை தொடர தயார்; ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு குமாரசாமி அறிவிப்பு
காங்கிரஸ் விரும்பினால் கூட்டணியை தொடர தயாராக இருப்பதாக, ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு குமாரசாமி அறிவித்தார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மை பலம் இல்லாமல் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு நேற்று முன்தினம் கவிழ்ந்தது. இதையடுத்து குமாரசாமி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா தலைமையில் நேற்று பெங்களூருவில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் முதல்-மந்திரி (பொறுப்பு) குமாரசாமி, மாநில தலைவர் எச்.கே.குமாரசாமி உள்பட கட்சி எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். சுமார் 3 மணி நேரம் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு தேவேகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “கட்சியை பலப்படுத்துவது குறித்து நாங்கள் விரிவாக ஆலோசனை நடத்தினோம். கட்சி பணிகளில் எம்.எல்.ஏ.க்களில் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம். கட்சியை பலப்படுத்துவது மட்டுமே எங்களின் தற்போதைய நோக்கம்“ என்றார்.
அதைத்தொடர்ந்து குமாரசாமி நிருபர்களிடம் கூறுகையில், “கட்சியை பலப்படுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசித்தோம். காங்கிரசுடன் கூட்டணி தொடருவது பற்றி நாங்கள் விவாதிக்கவில்லை. கூட்டணியை தொடருவது குறித்து முடிவு எடுக்க இரு கட்சிகளுக்கும் முழு சுதந்திரம் உள்ளது. காங்கிரஸ் விரும்பினால் கூட்டணியை தொடர நாங்கள் தயாராக உள்ளோம். காங்கிரஸ் என்ன முடிவு எடுக்கிறது என்பது எனக்கு தெரியாது“ என்றார்.