5 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில் பெங்களூரு மாநகராட்சியை கைப்பற்ற பா.ஜனதா தீவிர முயற்சி

பெங்களூருவை சேர்ந்த காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில் பெங்களூரு மாநகராட்சியை கைப்பற்ற பா.ஜனதா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

Update: 2019-07-24 23:36 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தின. இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள் உள்பட மொத்தம் 15 பேர் தங்களின் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதன் காரணமாக நேற்று முன்தினம் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.

இதே நிலை பெங்களூரு மாநகராட்சியில் மேயர் பதவியை கைப்பற்றுவதிலும் நடக்கலாம் என்று கூறப்படுகிறது. அதாவது 2015-ம் ஆண்டு பெங்களூரு மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் என்று யாருக்கும் மேயர் பதவியை கைப்பற்றுவதற்கான தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்ததோடு, சுயேச்சைகள் உதவியுடன் மேயர் பதவியை காங்கிரஸ் கட்சியும், துணை மேயர் பதவியை ஜனதாதளம்(எஸ்) கட்சியினரும் கைப்பற்றினர். நிலைக்குழு பொறுப்புகளுக்கு, சுயேச்சைகள், கவுன்சிலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். மாநகராட்சி மேயரை தேர்வு செய்வதில் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் வாக்களிக்கும் உரிமை உள்ளதால் இது காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளுக்கு கூடுதல் பலமாக அமைந்தது. இவ்வாறு 4 ஆண்டுகளாக பெங்களூரு மாநகராட்சியை காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் வசப்படுத்தி வைத்துள்ளன.

இந்த நிலையில், தற்போதைய மேயர், துணை மேயரின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் அடுத்ததாக மேயர் பதவியை பா.ஜனதா கைப்பற்ற முயற்சி செய்து வருகிறது. அதாவது, பெங்களூருவை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான எஸ்.டி.சோமசேகர், பைரதி பசவராஜ், முனிரத்னா, ரோஷன் பெய்க், ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. கோபாலய்யா ஆகியோர் தங்களின் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இதில் ரோஷன் பெய்க் தவிர்த்து மீதமுள்ள 4 எம்.எல்.ஏ.க்களும் பா.ஜனதாவுக்கு ஆதரவாக உள்ளனர். இதனால் மேயர் தேர்தல் நடைபெறும்போது அவர்கள் ஆதரவு கிடைக்கும் நிலையில் மேயர் பதவியை கைப்பற்ற பா.ஜனதா தீவிர முயற்சி செய்து வருகிறது. இதற்கான செயலில் பா.ஜனதாவின் 2-ம் கட்ட தலைவர்கள் திரைமறைவில் வேலைகள் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

மேலும் செய்திகள்