பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி சந்திரபிரபா எம்.எல்.ஏ. வழங்கினார்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினியை சந்திரபிரபா எம்.எல்.ஏ. வழங்கினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு பிள்ளையார்நத்தம் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளி, மம்சாபுரம் சிவந்திபட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர்கள் சுப்பிரமணியன், சாம்ஜெபராஜ், உதவி தலைமை ஆசிரியர் அரிராமன் தலைமை தாங்கினர். மம்சாபுரம் பள்ளி தலைவர் வடிவேல், கமிட்டி தலைவர் சுப்பையா நாடார், பள்ளி தாளாளர் எட்வின் கனகராஜ் ஆகியோர் வரவேற்று பேசினர்.
இதை தொடர்ந்து சந்திரபிரபா எம்.எல்.ஏ. மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி பேசினார். அவர் பேசும்போது “மாணவ சமுதாயம் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்திகளாகும். நீங்கள் தடையின்றி கல்வி கற்பதற்கு தாயுள்ளம் கொண்டு தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. நீங்கள் அவற்றை பெற்று கல்வியிலும், ஒழுக்கத்திலும் முன்மாதிரியாக திகழ வேண்டும். அரசு தேர்வுகளில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பெற வேண்டும். அதற்கு ஆசிரியர்களும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். மாணவர்கள் வீட்டில் தாய், தந்தையர் மற்றும் ஆசிரியர்களை மதித்து நடக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் கூட்டுறவு வங்கி தலைவர்கள் முத்தையா, எஸ்.எம். பாலசுப்பிரமணியம், தைலாகுளம் மணி, மம்சாபுரம் பேரூர் கழக செயலாளர் அய்யனார், மாவட்ட மகளிரணி மீரா தனலட்சுமி முருகன், அரசு ஒப்பந்ததாரர் ஜோதிமணி, அக்ரோ தலைவர் கருமாரி முருகன், முன்னாள் கவுன்சிலர்கள் அங்குராஜ், தனம், ஜெயலலிதா பேரவை கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.