வேதாளையில் குறைந்த மின்னழுத்தத்தால் பொதுமக்கள் அவதி
வேதாளை பகுதியில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக பழுதாகும் மின்சாதனை பொருட்களால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே கூடுதல் டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பனைக்குளம்,
மண்டபம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வேதாளை பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே மின் பற்றாக்குறை அதிக அளவில் உள்ளது. மின் வினியோகமும் சீராக இல்லை.
இப்பகுதியில் அதிகமான இணைப்புகள் இருப்பதாலும், அதற்கேற்றவாறு டிரான்ஸ்பார்மர்கள் இல்லாததாலும் குறைந்தழுத்த மின்சாரமே வினியோகிக்கப்படுகிறது. இதனால் மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகி வருகின்றன.இதன் காரணமாக பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைக்காக மின்சாதன பொருட்களை இயக்க முடியாத நிலை இருந்து வருகிறது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டபோது கூடுதல் டிரான்ஸ்பார்மர்கள் வைத்தால் மட்டுமே இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்றும், தற்போது போதுமான டிரான்ஸ்பார்மர்கள் இல்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
மேலும் வேதாளை கடற்கரை கிராமம் என்பதால் அடிக்கடி மின்கம்பிகள் அறுந்து விழுந்து மின்சாரம் தடைப்படுகிறது. இதனை சரி செய்ய நிரந்தர மின்வாரிய ஊழியர்கள் பணியில் இல்லை. இதனால் பெரும்பாலான நேரங்களில் மின்தடை மற்றும் குறைந்தழுத்த மின்வினியோகம் போன்ற குறைபாடுகளால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூங்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
எனவே அப்பகுதியில் கூடுதல் டிரான்ஸ்பார்மர் அமைக்கவும், போதிய மின் பணியாளர்கள் நியமிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.