விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.24 கோடி போதைப்பொருளுடன் வெளிநாட்டுக்காரர் கைது

மும்பைக்கு விமானத்தில் கடத்தப்பட்ட ரூ.24 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் வெளிநாட்டுக்காரர் கைதுசெய்யப்பட்டார்.

Update: 2019-07-24 21:57 GMT
மும்பை,

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சம்பவத்தன்று எத்தியோப்பியாவில் இருந்து வந்த விமானம் ஒன்று தரையிறங்கியது. அந்த விமானத்தில் பயணி ஒருவர் அதிகளவில் போதைப்பொருள் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை போட்டனர். சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டு பயணி ஒருவரை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை போட்டனர்.

இந்த சோதனையின் போது, அவரது உடலை சுற்றி பிளாஸ்டிக் டேப்பால் ஒட்டப்பட்டு சிறு சிறு பொட்டலங்கள் இருந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அந்த பொட்டலங்களை கைப்பற்றி சோதனை செய்தனர்.

இதில் அந்த பொட்டலங்களில் கொகைன் எனப்படும் போதைப்பொருள் இருந்தது. அவற்றின் மொத்த எடை 4 கிலோ 15 கிராம் இருந்தது. அதன் மதிப்பு ரூ.24 கோடி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியை கைது செய்தனர்.

விசாரணையில் அவர் பிரேசில் நாட்டை சேர்ந்த ரோட்ரிகோ சன்டோஸ் என்பது தெரியவந்தது. அவர் பிரேசிலில் இருந்து எத்தியோப்பியா சென்று அங்கிருந்து மும்பைக்கு போதைப்பொருளை கடத்தி கொண்டு வந்தது கண்டறியப்பட்டது. அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டில் பெரிய அளவில் போதைப்பொருள் பிடிபட்டு இருப்பது இது தான் முதன்முறையாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்