ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்ய 8,179 நடுநிலைப்பள்ளிகளில் பயோ-மெட்ரிக் கருவி அதிகாரி தகவல்

ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்ய 8,179 நடுநிலைப்பள்ளிகளில் பயோ-மெட்ரிக் கருவி பொருத்தும் பணிகள் விரைவில் தொடங்கும் என பள்ளிக்கல்வி துறை அதிகாரி தெரிவித்தார்.

Update: 2019-07-24 22:15 GMT
திருச்சி,

பள்ளிக்கல்வி துறையில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஆசிரியர்களின் வருகைப்பதிவு செய்யும் முறையையும் நவீனப்படுத்தியது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்ய பயோ-மெட்ரிக் முறை இந்த கல்வி ஆண்டில் அமல்படுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஆசிரியர்கள் பணிக்கு வரும்போது பயோ-மெட்ரிக் கருவியில் தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்து வருகின்றனர். மேலும் ஆசிரியர்கள் வருகைப்பதிவு கணினியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதனால் பள்ளிக்கு காலதாமதமாக சில ஆசிரியர்கள் வரும் நிலை தவிர்க்கப்பட்டிருக்கிறது. இதேபோல ஆசிரியர்கள் வருகைப்பதிவும் முறைப்படுத்தப்பட்டுள்ளது.

8,179 நடுநிலைப்பள்ளிகள்

இந்த நிலையில் 2-ம் கட்டமாக நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர் வருகைப்பதிவுக்காக பயோ-மெட்ரிக் கருவி பொருத்தப்பட உள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “தமிழகத்தில் 8,179 அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகளில் பயோ-மெட்ரிக் கருவி பொருத்தப்பட உள்ளது. ஆசிரியர்களின் ஆதார் எண் விவரம் சேகரிக்கப்பட்டு சேர்க்கப்படுகிறது. ஏற்கனவே உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பயோ-மெட்ரிக் கருவி பொருத்தப்பட்டபோது அந்த பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஊழியர்கள் மூலம் இந்த பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக முதல் கட்ட பணிகள் தற்போது தொடங்கி உள்ளது. திருச்சி மாவட்டத்திலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகளில் பயோ-மெட்ரிக் கருவி பொருத்தப்படுகிறது” என்றார்.

மேலும் செய்திகள்