தி.மு.க. முன்னாள் பெண் மேயர் கொலையில் உண்மை குற்றவாளிகளை பிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தி.மு.க. முன்னாள் மேயர் உமா மகேசுவரி கொலையில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை உடனே பிடித்து உரிய தண்டனை வழங்கவேண்டும் என்று நெல்லையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியபின் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

Update: 2019-07-24 23:30 GMT
நெல்லை,

நெல்லையில் நேற்று முன்தினம் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேசுவரி, அவருடைய கணவர் முருகசங்கரன், பணிப்பெண் மாரி ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு நேற்று மதியம் பிரேத பரிசோதனை முடிந்து அவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது ஏராளமான தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் திரண்டிருந்தனர். மதியம் 2.25 மணிக்கு உமா மகேசுவரி, முருகசங்கரன் ஆகியோரின் உடல்கள் அவர்களது வீட்டுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அங்கு உடல்களை பார்த்து உறவினர்களும், தி.மு.க.வினரும் கதறி அழுதனர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மதியம் 2.45 மணிக்கு அங்கு வந்தார். அவர் உமாமகேசுவரி, அவருடைய கணவர் முருகசங்கரன் ஆகியோரின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர்களது மகள்கள் கார்த்திகா, பிரியா மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
மறைந்த முன்னாள் மேயர் உமாமகேசுவரி, நான் சென்னை மேயராக இருந்த நேரத்தில், நெல்லை மாநகராட்சியின் முதல் மேயராக இருந்து திறம்பட பணியாற்றியவர். அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பெற்றவர். கருணாநிதியின், அன்பை பெற்றவர். அவருடைய பணியை பாராட்டி தி.மு.க. முப்பெரும் விழாவில் அவருக்கு பாவேந்தர் விருதை கருணாநிதி வழங்கி சிறப்பித்தார். அப்படிப்பட்ட உமாமகேசுவரியும், அவருடைய கணவர், பணிப்பெண் ஆகிய 3 பேரும் நினைத்து பார்க்கமுடியாத அளவிற்கு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடைய மறைவுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த ஆட்சியில் தொடர்ந்து இதுபோன்ற கொலை, கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடந்து கொண்டே இருக்கிறது. இந்த சம்பவங்களுக்கு முடிவே இல்லாமல் போய் கொண்டு இருக்கிறது. முதலில் இந்த படுகொலைகளுக்கு காரணமானவர்களை, அதாவது உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கவேண்டும். அதற்கு இந்த அரசு உண்மையான முயற்சி எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது முன்னாள் அமைச்சர்கள் சாத்தூர் ராமசந்திரன், தங்கவேலு, எம்.எல்.ஏ.க்கள் பூங்கோதை, டி.பி.எம்.மைதீன்கான், தி.மு.க. மாவட்ட செயலாளர் அப்துல்வகாப், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஆ.பிரபாகரன், அவை தலைவர் சுப.சீத்தாராமன், முன்னாள் எம்.பி. ஹெலன்டேவிட்சன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கொலை செய்யப்பட்ட முன்னாள் மேயர் உமாமகேசுவரி உடலுக்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் நிஜாம், தி.மு.ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி துணைச்செயலாளர் பெரும்படையார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் முகமதுஅலி, முன்னாள் மாவட்ட செயலாளர் பழனி, தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கண்மணிமாவீரன், செய்தி தொடர்பாளர் சண்முகசுதாகர், தமிழர் தேசிய கொற்றம் நிறுவன தலைவர் அ.வியனரசு, மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் மற்றும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இதையடுத்து 2 பேரின் உடல்களும் ஊர்வலமாக வி.எம்.சத்திரத்தில் உள்ள மயானத்துக்கு கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்