சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு வாகனங்கள் செல்ல அனுமதி மறுப்பு நீண்ட வரிசையில் நின்றன

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு நேற்று வாகனங்களில் வந்தவர்களுக்கு திடீரென வனத்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.

Update: 2019-07-24 22:30 GMT
விக்கிரமசிங்கபுரம்,

காரையாறு காணிக்குடியிருப்பு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 31-ந் தேதி நடக்கிறது. இந்த திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும். நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருவது வழக்கம். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அமாவாசைக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே கோவில் அருகே குடில்கள் அமைத்து தங்கி இருப்பது வழக்கம்.

இந்த கோவில் வனப்பகுதியில் உள்ளதால் இங்கு வரும் பக்தர்களுக்கு வனத்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து சோதனை செய்து அனுப்பி வைப்பது வழக்கம். மேலும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்க வருகிற 28-ந் தேதி 31-ந் தேதி வரை தனியார் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் தடை செய்யப்பட்டு, அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படும் எனவும், பக்தர்கள் அதில் ஏறி கோவிலுக்கு செல்ல வேண்டும் எனவும் வனத்துறையினர் அறிவித்து இருந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை ஆலங்குளத்தில் இருந்து தனியார் வாகனங்களில் கோவிலுக்கு வந்தவர்களை, பாபநாசம் சோதனை சாவடியில் வனத்துறையினர் திடீரென தடுத்து நிறுத்தினர். கோவிலில் சென்று தங்க அனுமதிக்க முடியாது என்று கூறினர். இதனால் வனத்துறையினருக்கும், பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி வந்தார். இதுதொடர்பாக வனத்துறையினரிடம், போலீசார் கேட்டறிந்தார். அதற்கு வனத்துறையினர், உயர் அதிகாரிகளிடம் கூட்டம் நடத்தி தெரிவிப்பதாக கூறினர். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து கோவிலுக்கு செல்ல வனத்துறையி னர் அனுமதித்தனர். அப்போது பக்தர்கள் ஒழுங்கீன செயல்களில் எதுவும் ஈடுபட மாட்டோம் எனவும், வனப்பகுதியில் தங்களுக்கு ஏற்படும் பாதுகாப்புக்கு தாங்களே பொறுப்பு எனவும் எழுதி கொடுத்துவிட்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்