மாவட்டத்தில் 3,654 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ப்பு கலெக்டர் ஆசியா மரியம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் இந்த கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளில் இருந்து விலகி, 3,654 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்து இருப்பதாக கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.

Update: 2019-07-24 22:15 GMT
நாமக்கல்,

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப் பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகள் 744, நடுநிலைப்பள்ளிகள் 178, உயர்நிலைப்பள்ளிகள் 70, மேல்நிலைப்பள்ளிகள் 105 என மொத்தம் 1,097 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 67 ஆயிரத்து 832 மாணவர்கள், 69 ஆயிரத்து 344 மாணவிகள் என மொத்தம் 1 லட்சத்து 37 ஆயிரத்து 176 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு 7 ஆயிரத்து 203 ஆசிரியர்கள் கல்வி கற்பித்து வருகின்றனர்.

தமிழக அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, வண்ண பென்சில்கள், கணித உபகரண பெட்டி, பாடநூல்கள், பாட குறிப்பேடுகள், புத்தகப்பை, வண்ணச்சீருடைகள், வரைபடம், காலணிகள் போன்றவற்றை விலையில்லாமல் வழங்கி வருகின்றது.

மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் கணினி வகுப்புகளுடன், நவீன தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி, தனியார் பள்ளிகளுக்கு இணையாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாமக்கல் மாவட்டத்தை 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்ச்சி விகிதத்தில் முதன்மை மாவட்டமாக உயர்த்த எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக 2019-ம் ஆண்டில் பிளஸ்-2 வகுப்பில் 94.97 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதேபோல் 10-ம் வகுப்பில் 98.45 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

அரசு பள்ளிகளின் சிறப்பு குறித்தும், அரசின் திட்டங்கள் குறித்தும் வீடுகள் தோறும் சென்று ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு விளக்கம் அளித்ததன் அடிப்படையில் மாவட்டத்தில் அரசு பள்ளிகளின் மீது பெற்றோருக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது. இதன் விளைவாக இந்த கல்வி ஆண்டில் மட்டும் 3 ஆயிரத்து 654 மாணவர்கள் தனியார் பள்ளியிலிருந்து விலகி, அரசுப்பள்ளியில் சேர்ந்து உள்ளனர்.

குறிப்பாக ஆர்.புதுப்பாளையம் அரசுப்பள்ளியில் 108 மாணவர்களும், திருச்செங்கோடு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 82 மாணவிகளும், திருச்செங்கோடு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 73 மாணவர்களும், குமாரபாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 61 மாணவிகளும், வெண்ணந்தூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 55 மாணவர்களும் தனியார் பள்ளியில் இருந்து அரசுப்பள்ளியில் சேர்ந்து உள்ளனர்.

2017-18-ம் கல்வியாண்டின் தொடக்கத்தில் நாமக்கல் அழகுநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2 மாணவர்கள் மட்டுமே படித்ததால் அந்த பள்ளியை மூடும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து பள்ளியின் ஆசிரியைகள் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகள் குறித்தும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மிக எளிதாகவும், சரளமாகவும் வாசிக்கும் திறனைக் கற்றுக் கொடுப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

இதன் காரணமாக 2018-19-ம் கல்வியாண்டில் இப்பள்ளி 41 மாணவர்கள் கொண்ட பள்ளியாக உயர்ந்தது. பள்ளியின் கல்வித்தரம் குறித்து பெற்றோர், நேரில் பார்வையிட்டதன் காரணமாக தற்போது 73 மாணவ, மாணவிகள் அப்பள்ளியில் படித்து வருகின்றனர். எனவே அனைத்து ஆசிரிய, ஆசிரியைகளும் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள், கற்றல் திறன் குறித்து பொதுமக்களுக்கு எடுத்து கூறி, அதிக மாணவர்களை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்