தஞ்சை அருகே ஏகவுரியம்மன் கோவில் சாலை சீரமைக்கப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு

தஞ்சை அருகே ஏகவுரியம்மன் கோவில் சாலை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2019-07-24 22:30 GMT
கள்ளப்பெரம்பூர்,

தஞ்சை அருகே உள்ள வல்லத்தில் இருந்து ஆலக்குடி செல்லும் சாலையில் பழமை வாய்ந்த ஏகவுரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அடுத்த மாதம் (ஆகஸ்டு) 16-ந் தேதி ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி இக்கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற உள்ளது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வல்லம் ஆலக்குடி சாலையில் இருந்து ஏகவுரியம்மன் கோவிலுக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

சீரமைக்க வேண்டும்

சாலை மிகவும் பழுதடைந்து, கற்கள் சிதறி கிடப்பதால் நடந்து செல்வதற்கு கூட சிரமமாக இருப்பதாக பக்தர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஏகவுரியம்மன் கோவிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மேலும் செய்திகள்