கூடுவாஞ்சேரி– கொட்டமேடு சாலை 4 வழி சாலையாக அகலப்படுத்தும் பணி தீவிரம்
கூடுவாஞ்சேரி– கொட்டமேடு சாலை 4 வழி சாலையாக அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் இருந்து கொட்டமேடு வரை 17.6 கிலோமீட்டர் இரு வழி சாலை செல்கிறது. இந்த சாலையை ஒட்டியுள்ள நந்திவரம், மூலக்கழனி, பெருமாட்டுநல்லூர், காயரம்பேடு, கன்னிவாக்கம், பாண்டூர், கல்வாய், நெல்லிக்குப்பம் உள்பட பல்வேறு கிராமங்களில் பல பள்ளிக்கூடங்களும், அடுக்குமாடி குடியிருப்புகளும், தொழிற்சாலைகளும் அதிக அளவில் இருப்பதால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மோட்டார் சைக்கிள்கள், கார்கள் உள்பட பல்வேறு வாகனங்களில் தினந்தோறும் கூடுவாஞ்சேரி– கொட்டமேடு சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் இந்த சாலை எப்போதும் நெரிசல் மிகுந்த சாலையாக காணப்படுகிறது. இதன் காரணமாக தினமும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.
இதையடுத்து மத்திய அரசின் சாலை நிதி திட்டத்தின் கீழ் கூடுவாஞ்சேரியில் இருந்து கொட்டமேடு வரை செல்லும் 17.6 கிலோமீட்டர் இரு வழி சாலையை ரூ.76 கோடியே 87 லட்சத்து 50 ஆயிரம் செலவில் 4 வழி சாலையாக அகலப்படுத்தும் பணி தொடங்கி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்:–
கூடுவாஞ்சேரியில் இருந்து கொட்டமேடு செல்லும் சாலை 2 வழி சாலையில் இருந்து 4 வழி சாலையாக அகலப்படுத்தும் பணி தற்போது தொடங்கி நடந்து வருகிறது. கூடுவாஞ்சேரியில் இருந்து காயரம்பேடு வரை சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் இருப்பதால் அவற்றை அகற்றும் பணி விரைவில் நடைபெறும். 4 வழி சாலையாக முழுமையாக மாற்றப்படும் பணி 5.9.2020–க்குள் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.