காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்காததால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

மயிலாடுதுறை அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்காததால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-07-24 22:15 GMT
குத்தாலம்,

மயிலாடுதுறை அருகே மல்லியம் கீழத்தெருவை சேர்ந்த ஜெயராஜ் மகன் கபிலன் (வயது 26). இவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக கபிலன், ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. அதன் பின்னர் 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடு சென்ற கபிலன், செல்போனில் பேசி அந்த பெண்ணை தொடர்ந்து காதலித்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கபிலன், சொந்த ஊருக்கு வந்தார்.

இந்த நிலையில் காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்கும்படி கபிலன் தனது பெற்றோரிடம் கூறினார். அதற்கு அவரது பெற்றோர், உனது தங்கைக்கு திருமணம் செய்து வைத்த பின்னரே உன் திருமணத்தை பற்றி பேச முடியும் என்று கபிலனிடம் கண்டித்து கூறியதாக தெரிகிறது.

விஷம் குடித்து தற்கொலை

இதனால் மனமுடைந்த கபிலன், கடந்த 20-ந் தேதி விவசாயத்திற்கு பயன்படுத்தக்கூடிய பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு வீட்டில் மயங்கி விழுந்தார்.

இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் கபிலன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக குத்தாலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபுராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்