காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் கதவணை அமைக்கும் பணி தீவிரம்

காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் கதவணை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2019-07-24 21:30 GMT
காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் அருகே ஆதனூர்- குமாரமங்கலம் கிராமங்களுக்கு இடை யே கொள்ளிடம் ஆறு செல்கிறது.

இந்த ஆற்றின் குறுக்கே மதகுகளுடன் கூடிய கதவணை மற்றும் பாலம் அமைக்கும் திட்டத்திற்காக ரூ.400 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கதவணை அமைக்கும் பணி கடந்த மே மாதம் 4-ந் தேதி தொடங்கியது. இந்த பணிக்கான திட்ட காலம் 24 மாதங்கள் ஆகும்.

தற்போது கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை நீர் வள ஆதாரங்கள் செயற்பொறியாளர் கண்ணன் கூறுகையில், மழை வெள்ள காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை இந்த கதவணை மூலம் தேக்குவதால், இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

இதன் மூலம் சுமார் 24 ஆயிரம் ஏக்கர் விளை நிலம் பாசன வசதி பெறும். மீதமுள்ள தண்ணீரை வீராணம் ஏரி மூலம் சென்னைக்கு குடி நீர் தேவைக்கு அனுப்பி வைக்க முடியும்.

மேலும் கதவணையில் இருந்து வினாடிக்கு 5 லட்சம் கன அடி தண்ணீரை வெளியேற்றலாம். ஆண்டுக்கு 4 முறை நிரம்பினால் 1.072 டி.எம்.சி. தண்ணீரை தேக்க முடியும்.

மேலும் பாலம் அமைக்கப்படுவதால் கடலூர், நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சி மேம்படும். கதவணைகள் அமைக்கும் பணி புதிய தொழில் நுட்பம் மற்றும் அதிநவீன எந்திரம் மூலம் நடைபெறுவதால் திட்டமிட்ட காலத்தைவிட விரைவில் பணிகள் முடிவடையும் என்றார்.

மேலும் செய்திகள்