அளக்கரை திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்ய அறிக்கை தயாரிக்கும் பணி மும்முரம்

அளக்கரை கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் கோத்தகிரியில் குடிநீர் வினியோகம் செய்ய திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2019-07-24 22:30 GMT
கோத்தகிரி,

கோத்தகிரி நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக ஈளாடா தடுப்பணை உள்ளது. ஆனால் கோடை காலத்தில் தடுப்பணை வறண்டு விடுவதால், கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை போக்கும் வகையில் அளக்கரை கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கு அரசு ரூ.10 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதைத்தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பணிகளும் தொடங்கப்பட்டன. அளக்கரை பகுதியில் செல்லும் நீரோடையை தடுத்து, அதிலிருந்து தண்ணீரை சேகரித்து வைக்க தரைமட்ட நீர்தேக்க தொட்டி அங்கு கட்டப்பட்டது. மேலும் நீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அங்கிருந்து சக்திமலைக்கு தண்ணீரை கொண்டு செல்ல இரும்பு குழாய்கள் பதிக்கப்பட்டன. சக்திமலையில் அந்த தண்ணீரை சேகரித்து வைக்க 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி கட்டப்பட்டது. மேலும் தலா 8 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 சுத்திகரிப்பு தொட்டிகள், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை சேகரித்து வைக்க 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வினியோகம் செய்ய 4 லிட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி ஆகியவற்றுடன் சுத்திகரிப்பு நிலையமும் கட்டி முடிக்கப்பட்டது. மேலும் அளக்கரையில் இருந்து சக்திமலைக்கு செல்லும் வழியில் 7 இடங்களில் நீர்த்தேக்க தொட்டிகளும், நீர்உந்து நிலையங்களும் அமைக்கப்பட்டன.

அதன்பின்னர் அளக்கரை கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று நிறைவு பெற்றன. தினமும் தலா 8 லட்சம் லிட்டர் தண்ணீரை 2 சுத்திகரிப்பு தொட்டிகளிலும் தேக்கி வைக்க முடியும். இவ்வாறு தேக்கி வைக்கப்படும் தண்ணீரை கோத்தகிரி நகர மக்களுக்கு வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை தனியார் நிறுவனத்திடம், தமிழ்நாடு நகர்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் ஒப்படைத்தது. அந்த தனியார் நிறுவனத்தின் பொறியாளர் குழு கோத்தகிரி குடியிருப்பு பகுதிகளை ஆய்வு செய்து வருகிறது. மேலும் குடிநீர் வினியோகம் செய்ய வசதியாக நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட வேண்டிய உயரமான பகுதிகளை தேர்வு செய்யப்படுகிறது.

இது தவிர சக்திமலையில் இருந்து குழாய்கள் மூலம் நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீரை கொண்டு வந்து வினியோகிப்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. இந்த பணியில் அந்த குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து கோத்தகிரி பேரூராட்சி அதிகாரிகள் கூறும்போது, குடிநீர் வினியோக திட்ட அறிக்கையை தனியார் நிறுவன பொறியாளர் குழு விரைவில் சமர்ப்பிக்கும். அதற்கு தேவையான தொகை மதிப்பிடப்பட்டு கோத்தகிரி பேரூராட்சிக்கு, தமிழ்நாடு நகர்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் வழங்கும். அதை வைத்து குடிநீர் வினியோக பணிகள் தொடங்கும் என்றனர்.

மேலும் செய்திகள்