விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனைவி வழக்கு தொடர்ந்ததால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
உடுமலை அருகே விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனைவி வழக்கு தொடர்ந்ததால் விரக்தியடைந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
உடுமலை,
பொள்ளாச்சி தாலுகா கோலார்பட்டி அருகில் உள்ள நல்லாம்பள்ளியை சேர்ந்தவர் பாலன் (வயது 36). இவருக்கும் உடுமலை தாலுகா புங்கமுத்தூரை சேர்ந்த புனிதா என்பவருக்கும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். புனிதாவிற்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கிராம நிர்வாக உதவியாளர் வேலை கிடைத்தது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்– மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் புனிதா, தனது மகனுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்று வசித்து வருகிறார்.
இதனால் பாலன் கூலி வேலைக்கு சென்று வந்தார். மேலும் அவ்வப்போது நல்லாம்பள்ளியில் உள்ள தனது அக்காவின் வீட்டிற்கும் சென்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு புனிதா தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதனால் பாலன் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் உடுமலை பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் கல்லூரிக்கு முன்பு உள்ள பஸ் நிறுத்ததில் பாலன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய தகவல் அறிந்தும் உடுமலை போலீசார் விரைந்து சென்று பாலனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பாலனின் அக்காள் பேச்சியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் உடுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து பிரேத விசாரணை நடத்தி வருகிறார்.