தாளவாடி அருகே பசுமாட்டை புலி அடித்துக்கொன்றது பொதுமக்கள் அச்சம்

தாளவாடி அருகே பசுமாட்டை புலி அடித்துக்கொன்றது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளார்கள்.

Update: 2019-07-24 22:30 GMT

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள ஜீர்கள்ளி தமிழ்புரம் பகுதியை சேர்ந்தவர் பாசில் (வயது 47). விவசாயி. கால்நடைகளும் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் காலை பாசில், தன்னுடைய ஆடு, மாடுகளை வனப்பகுதியை ஒட்டியுள்ள ஒரு தோட்டத்தில் மேய்ச்சலுக்காக விட்டு இருந்தார். பின்னர் மாலை 5 மணிக்கு, பாசில் தோட்டத்துக்கு சென்றார். அப்போது அங்கு அவர் வளர்த்து வந்த பசுமாடு ஒன்று இறந்து கிடந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அந்த பசுமாட்டின் கழுத்து மற்றும் வயிற்றுப்பகுதியில் மர்மவிலங்கு கடித்திருந்ததும், அதனால்தான் அந்த பசுமாடு இறந்ததும் தெரியவந்தது.

இதுபற்றி அவர் அக்கம் பக்கத்து விவசாயிகளிடம் கூறினார். அதன்பேரில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து, இறந்து கிடந்த பசுமாட்டை பார்வையிட்டனர்.

மேலும் இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஜீர்கள்ளி வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று, இறந்து கிடந்த பசுமாட்டின் உடலை பார்வையிட்டனர். மேலும், அங்கு பதிவாகி இருந்த கால்தடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் அது புலியின் கால்தடம் என்பதும், பசுமாட்டை புலிதான் அடித்துக்கொன்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து புலி அடித்துக்கொன்ற பசுமாட்டின் உடல் அந்தப்பகுதியிலேயே குழி தோண்டி புதைக்கப்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் யானைகள் தான் அடிக்கடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. ஆனால் கடந்த சில தினங்களாக சிறுத்தை மற்றும் புலி ஊருக்குள் புகுந்து ஆடு, மாடு மற்றும் நாய்களை அடித்துக்கொல்கிறது. இதனால் வீட்டை விட்டு வெளியே செல்வதற்கே அச்சமாக உள்ளது.

இதேபோல் சிறுத்தையின் தொடர் அட்டகாசத்தால் பீதியில் உறைந்த நாங்கள், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

மேலும், ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தை மற்றும் புலியை கூண்டு வைத்து பிடிப்பதோடு, அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்