வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; கீழ்பவானி பாசன பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம்

வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று ஈரோட்டில் நடந்த கீழ்பவானி பாசன பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2019-07-24 23:15 GMT
ஈரோடு,

கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் கீழ்பவானி பாசன பாதுகாப்பு மாநாடு ஈரோட்டில் நடைபெற்றது. மாநாட்டுக்கு சங்க தலைவர் செ.நல்லசாமி தலைமை தாங்கினார். மாநாட்டில் கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் காசியண்ணகவுண்டர், செயலாளர் வடிவேல், தனியரசு எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* நடப்பு பாசன பருவத்தில் இருந்து காவிரி தீர்ப்பின்படி பவானிசாகர் அணையின் நீர் நிர்வாகம் நடத்தப்பட வேண்டும்.

* பவானிசாகர் அணையின் தண்ணீர் சம்பா சாகுபடிக்கு மட்டுமே திறக்கப்பட வேண்டும். கோடையிலும், குறுவை பருவத்திலும் திறந்துவிடக்கூடாது.

* பவானி பாசனங்களுக்கான நீரளவு காவிரி தீர்ப்பில் வரையறை செய்யப்பட்டு உள்ளது. அதன்படி 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட கீழ்பவானி பாசனத்துக்கு 27.95 டி.எம்.சி.யாகவும், பழைய பவானி பாசனங்களுக்கு 8.13 டி.எம்.சி.யாகவும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் நீர் பங்கீடு இருக்க வேண்டும்.

* பவானிசாகர் அணையில் இருந்து பவானி வரையிலான கூட்டு குடிநீர்த்திட்டங்களுக்கு அணைக்கு அருகில் ஆற்றங்கரையோரமாக குழாய் பதித்து தண்ணீர் எடுக்க வேண்டும். இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் திறந்துவிடுவதற்கு பதிலாக வினாடிக்கு 25 கனஅடி தண்ணீர் திறந்துவிட்டாலே போதுமானது.

* கீழ்பவானி பிரதான வாய்க்கால், பகிர்வு வாய்க்கால், கிளை வாய்க்கால், கொப்பு வாய்க்கால் என அனைத்து வாய்க்கால்களின் எல்லையை வரையறை செய்து, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும்.

* கீழ்பவானி பாசன திட்டத்தை பெற்று தந்த சுதந்திர போராட்ட வீரர் எம்.ஏ.ஈஸ்வரனுக்கு கீழ்பவானி பாசன பயனாளிகளின் செலவில் பவானிசாகர் அணை பூங்கா வளாகத்தில் நினைவுத்தூண் நிறுவ தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

* பவானி ஆறு மாசுபடுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் பாண்டியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி தமிழகத்துக்கு திருப்பினால் 14 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும். முல்லை பெரியாற்று நீரும், பரப்பிக்குளம் ஆழியாறு திட்ட நீரும் தமிழ்நாட்டுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதைபோல கேரளாவுக்கு மின்சாரம், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் என்ற அடிப்படையில் மத்திய அரசின் நிதிஉதவியுடன் பாண்டியாறு-மோயாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

* பெட்ரோலுக்கு மாற்று எரிபொருளாக எத்தனாலை பயன்படுத்த அரசு திட்டமிட வேண்டும்.

* தமிழ்நாட்டில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் கள் தடையை நீக்கி அரசு அறிவிக்க வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்