நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்துவது குறித்து மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு
வேலூர் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சினைக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்துவது குறித்தும் மத்திய அரசு அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
வேலூர்,
தமிழ்நாட்டில் பருவ மழை பொய்த்ததன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வேலூர் மாவட்டம் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தண்ணீருக்காக இரவு நேரங்களிலும் குடிநீர் குழாய் அருகில் காத்திருந்து தண்ணீர் பிடித்து வந்தனர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறுகள் அமைத்தல் உள்பட தண்ணீர் பிரச்சினையை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டத்தின்கீழ் தண்ணீர் பிரச்சினைக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், மழைநீர் சேகரிப்பு, தடுப்பணைகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு அதிகாரிகள் 16 பேர் கொண்ட குழுவினர் வேலூருக்கு வந்துள்ளனர்.
இவர்கள் 3 நாட்கள் வேலூரில் தங்கியிருந்து மாவட்டம் முழுவதும் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதற்கான காரணங்கள், தண்ணீர் பிரச்சினைக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை, மழைநீர் சேகரிப்பு குறித்து ஆய்வு செய்கின்றனர்.
முதல் நாளான நேற்று அவர்கள் வேலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் சென்று தடுப்பணைகள், நீர்வரத்து கால்வாய், தூர்வாரப்பட்ட ஏரி, குளங்கள், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மரக்கன்று நடப்பட்டது குறித்து ஆய்வு செய்தனர்.
வேலூர் சத்துவாச்சாரி மலையடிவாரத்தில் சிறிய தடுப்பணை கட்டப்படும் இடத்தை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் தாராபடவேடு, இடையன்சாத்து, வ.உ.சி.நகர் பகுதிகளில் உள்ள நீர்வரத்து கால்வாய்களையும் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) அவர்கள் ஆய்வு செய்கின்றனர்.
தற்போது வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் நடப்பதால், தேர்தல் ஆணையத்திடமிருந்து சிறப்பு அனுமதி பெற்று இவர்கள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.