திருவண்ணாமலை பகுதிகளில் 51 அரசு பஸ்களில் இருந்து காற்று ஒலிப்பான் பறிமுதல்

திருவண்ணாமலை பகுதிகளில் 51 அரசு பஸ்களில் காற்று ஒலிப்பான் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஏர்ஹாரன் பயன்படுத்தியதாக 129 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-07-24 22:15 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை நகரம் வளர்ந்து வரும் நகரமாக திகழ்கிறது. இங்கு நாளுக்கு நாள் வாகனங்கள் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் நகரின் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பக்தர்கள் வருகை தரும் விசேஷ நாட்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது.

இந்தநிலையில் நகரில் உலா வரும் பஸ்கள் மற்றும் வேன், ஆட்டோ போன்றவற்றில் ஏர் ஹாரன் (காற்று ஒலிப்பான்) பயன்படுத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்திக்கு புகார்கள் சென்றது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை தலைமையில் 6 குழுக்கள் அமைக்கப்பட்டது. கடந்த 2 நாட்களில் வாகனங்களில் ஏர்ஹாரன் பயன்படுத்தியதாக 129 வழக்குகள் பதியப்பட்டது. மேலும் 51 அரசு பஸ்களில் இருந்து காற்று ஒலிப்பான் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை கூறியதாவது:-

திருவண்ணாமலை நகரில் பல வாகனங்களில் குறிப்பாக அரசு மற்றும் தனியார் பஸ்களில் ஏர் ஹாரன் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. அதன்பேரில் திருவண்ணாமலை டவுன், கிழக்கு, தாலுகா, வேட்டவலம், கீழ்பென்னாத்தூர், மங்கலம் ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வாகன தணிக்கை செய்யப்பட்டது.

அதன்படி கடந்த 2 நாட்களில் 129 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 51 அரசு பஸ்களில் ஏர்ஹாரன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வாகன தணிக்கை தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்