வானவில் : தூக்கத்தை கண்காணிக்கும் ‘டூஸ்’
வீட்டுக்கு உணவை வரவழைக்கவும், வாயிற்படிக்கு கார், ஆட்டோவை வரவழைக்கவும் பல்வேறு செயலிகள் (ஆப்) வந்துள்ளன.
மனிதனின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான தூக்கத்துக்கு கவனம் செலுத்தும் மின்னணு கருவிகள் வெகு குறைவு. அந்தக் குறையைப் போக்க வந்துள்ளது ‘டூஸ்’. மிகவும் மெல்லிய காகிதம் போன்ற இந்த கருவியில் உள்ள சென்சார்கள் உங்கள் தூக்கத்தை கண்காணிக்கும். இதை உங்கள் தலையணை அடியில் வைத்து தூங்கினால், உங்களது தூக்க நிலை எப்படி உள்ளது என்ற விவரத்தை உங்கள் ஸ்மார்ட்போனுக்கு அனுப்பும்.
தூங்கும்போது உங்கள் இதய துடிப்பு, சுவாசம், விழிக்கும் இடைவெளி, மன அழுத்தம், மன உளைச்சல் உள்ளிட்டவற்றை பதிவு செய்து தினசரி அனுப்பும். இதன் அடிப்படையில் உங்கள் தூக்கத்தை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்து ஆரோக்கியமாக வாழ முடியும். வெளியூர்களில் பணியாற்றுவோர், பெற்றோரின் உடல் நிலையைப் பற்றி தெரிந்து கொள்ளவும் இது உதவும்.
அவர்கள் தங்கள் ஸ்மார்ட்போனின் மூலமே பெற்றோரின் தூக்க நிலையை அறிந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கலாம். கூகுள் பிளே ஸ்டோரில் டூஸ் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பட்டியலில் ஆன்லைன் மூலம் ஆலோசனை கூற மருத்துவர்களும் உள்ளது கூடுதல் சிறப்பம்சமாகும். டூஸ் கண்காணிப்பு 98.4 சதவீத அளவுக்கு துல்லியமாக இருப்பது கூடுதல் சிறப்பாகும். விலை சுமார் ரூ.7,199.