நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி: எடியூரப்பா நாளை முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார்
கர்நாடக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு தோல்வி அடைந்தது. பா.ஜனதா அரசின் புதிய முதல்-மந்திரியாக எடியூரப்பா நாளை (வியாழக்கிழமை) பதவி ஏற்கிறார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபைக்கு கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற்றது.
இதில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதா 104 இடங்களிலும், காங்கிரஸ் 80 இடங்களிலும், ஜனதா தளம்(எஸ்) 37 இடங்களிலும், பகுஜன் சமாஜ் ஒரு இடத்திலும், 2 சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர். சட்டசபையில் பெரிய கட்சி என்பதால், பா.ஜனதா ஆட்சிக்கு கவர்னர் அனுமதி வழங்கினார். ஆனால் எடியூரப்பாவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு கடந்த ஆண்டு மே மாதம் 23-ந் தேதி அமைந்தது. குமாரசாமி முதல்-மந்திரியாகவும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரமேஸ்வர் துணை முதல்-மந்திரியாகவும் பணியாற்றினர். இந்த கூட்டணி அரசு அமைந்து சரியாக நேற்றுடன் 14 மாதங்கள் முடிவடைந்தது.
கடந்த 14 மாதங்களில் பா.ஜனதா ஆபரேஷன் தாமரை மூலம் கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சி செய்து, ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டது. ஆனால் அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தலில் இந்த கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. கூட்டணி கட்சிகள் தலா ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றன. இது கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆனந்த்சிங் திடீரென யாருமே எதிர்பார்க்காத வகையில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அவர் ராஜ்பவனுக்கு சென்று கவர்னரிடம் தகவல் தெரிவித்தார். இதனால் காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாலும், அடுத்த சில நாட்களில் அது அடங்கி விட்டது.
அதன் பிறகு கடந்த 6-ந் தேதி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 பேர் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 13 எம்.எல்.ஏ.க்கள் திடீரென விதான சவுதாவுக்கு வந்து சபாநாயகர் அலுவலகத்தில் ராஜினாமா கடிதத்தை வழங்கினர். அவர்கள் கவர்னருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, தனி விமானத்தில் மும்பைக்கு பறந்து சென்றனர்.
யாருமே எதிர்பார்க்காத இந்த அரசியல் திருப்பம், கர்நாடக அரசியலில் பூகம்பத்தை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வுகள் நடந்தபோது குமாரசாமி அமெரிக்காவில் இருந்தார். அரசியல் திருப்பங்களால் குமாரசாமி அவசரமாக பெங்களூரு திரும்பினார். ராஜினாமா கொடுத்த எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்த கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் தீவிர முயற்சியில் இறங்கினர்.
ஆனால் அந்த முயற்சி எந்த வகையிலும் பலனளிக்கவில்லை. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் எம்.டி.பி.நாகராஜ், சுதாகர் ஆகியோர் ராஜினாமா செய்தனர். ஆகமொத்தம் 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதனால் கூட்டணி அரசு கவிழும் நிலை ஏற்பட்டது. காங்கிரஸ் மேலிட தலைவர்கள் கேட்டுக் கொண்டதை அடுத்து ராஜினாமா கொடுத்தவர்களில் ராமலிங்கரெட்டி மட்டும் தனது ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற்றார்.
அதனால் 15 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதம் சபாநாயகரின் பரிசீலனையில் உள்ளது. இதனால் கர்நாடக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 12-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. முதல் நாளிலேயே, முதல்-மந்திரி குமாரசாமி, நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தாக்கல் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி கடந்த 18-ந் தேதி குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை சட்டசபையில் தாக்கல் செய்தார். அதன் மீது 4 நாட்கள் விவாதம் நடைபெற்றது. வாக்கெடுப்பை நடத்தி முடிக்கும்படி குமாரசாமிக்கு கவர்னர் வஜூபாய் வாலா, கடந்த 18 மற்றும் 19-ந் தேதி 2 முறை கெடு விதித்து உத்தரவிட்டார். ஆனால் அந்த கெடுவின்படி குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை.
இருப்பினும் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது விவாதம் தொடர்ந்து வந்தது. நேற்று முன்தினமே வாக்கெடுப்பு நடத்துவதாக சபாநாயகர் பிடிவாதமாக கூறினார். ஆனால் கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள், ஒத்திவைக்க கோரி நள்ளிரவு வரை தர்ணா போராட்டம் நடத்தியதால், சபாநாயகர் வாக்கெடுப்பை நேற்றைக்கு ஒத்திவைத்தார். அதாவது மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு பணிகள் முழுவதுமாக முடிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
இந்த நிலையில் நேற்று காலை 10 மணிக்கு பெங்களூரு விதான சவுதாவில் சட்டசபை கூடியது. இதன் மீது சித்தராமையா உள்பட மந்திரிகள் பேசினர். அதன் பிறகு கடைசியாக நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து குமாரசாமி பேசினார்.
அவரது பேச்சு, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டிருந்த மாலை 6 மணிக்கு மேலும் தொடர்ந்தது. இதனால் வாக்கெடுப்பு நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. மேலும் பா.ஜனதாவினரும் மாலை 6 மணி தாண்டியும் வாக்கெடுப்பு நடைபெறாததால் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இதற்கிடையே குறுக்கிட்ட சபாநாயகர், திட்டமிட்டப்படி இன்று (நேற்று) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும். இல்லையெனில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக மிரட்டல் விடுத்தார். இதனால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது.
அத்துடன் தனது பையில் வைத்திருந்த ராஜினாமா கடிதத்தை அவை காவலரிடம் கொடுத்து எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பாவிடம் கொடுக்குமாறு கூறினார். அந்த கடிதத்தை எடியூரப்பா வாங்கி பார்த்துவிட்டு திரும்ப சபாநாயகருக்கு கொடுத்து அனுப்பினார்.
இரவு 7 மணி ஆன நிலையில் தொடர்ந்து குமாரசாமி பேசியபடி இருந்தார். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு பணி தொடங்குவது தாமதமாகி வந்தது. சரியாக இரவு 7.15 மணி அளவில் குமாரசாமி தனது பேச்சை முடித்தார்.
அதனை தொடர்ந்து இரவு 7.25 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதாவது கூட்டணி அரசு உறுப்பினர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வரிசையில் நிற்கவைத்து தலை எண்ணிக்கை அடிப்படையில் ஒவ்வொரு வரிசையாக வாக்கெடுப்பு நடந்தது. இதில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்திற்கு ஆதரவாக 99 உறுப்பினர்களின் ஆதரவும், எதிராக 105 உறுப்பினர்களின் ஆதரவும் கிடைத்தது.
அந்த தீர்மானத்திற்கு எதிராக அதிக உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்ததை அடுத்து, குமாரசாமி கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானம் தோல்வி அடைந்தது. அதனால் கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதுகுறித்து அதிகாரபூர்வமாக சபாநாயகர் ரமேஷ்குமார் சபையில் அறிவித்தார். அந்த சமயத்தில் குமாரசாமி தனது கன்னத்தில் கைவைத்த படி சோகத்துடன் இருந்தார்.
அதன் பிறகு குமாரசாமி ராஜ்பவனுக்கு சென்று ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் வழங்கினார். புதிய அரசு அமையும் வரை, முதல்-மந்திரி பதவியில் நீடிக்கும்படி குமாரசாமியை கவர்னர் கேட்டுக் கொண்டார்.
கர்நாடகத்தில் 14 மாதங்கள் நடைபெற்ற காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி அரசு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. நாளை (வியாழக்கிழமை) பா.ஜனதா அரசின் புதிய முதல்-மந்திரியாக எடியூரப்பா பதவி ஏற்கிறார்.