முதல்-மந்திரி பதவியை விட்டு மகிழ்ச்சியாக செல்கிறேன் - சட்டசபையில் குமாரசாமி உருக்கம்
முதல்-மந்திரி பதவியை விட்டு மகிழ்ச்சியாக செல்கிறேன் என்றும், எடியூரப்பா சுலபமாக ஆட்சி நடத்த முடியாது என்றும் சட்டசபையில் குமாரசாமி கூறினார்.;
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் மீது நடைபெற்ற விவாதத்தில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-
எனக்கு எடியூரப்பா தொல்லை கொடுத்துள்ளார். அதே போல் சதானந்தகவுடா முதல்-மந்திரியாக இருந்தபோதும், அவருக்கு இடையூறு செய்து எம்.எல்.ஏ.க்களை ரெசார்ட்டுக்கு அனுப்பினார். குடகில் வெள்ளம் ஏற்பட்டு பெரிய அளவில் பாதிப்புகள் உண்டானது. அங்கு அரசு நிவாரண பணிகளை மேற்கொண்டோம்.
எச்.டி.ரேவண்ணா ஒரு அப்பாவி. கோவிலில் வழங்கும் எலுமிச்சை பழங்களை கைகளில் வைத்துள்ளார். இதை ஊடகங்கள் விமர்சனம் செய்கின்றன. நீர்ப்பாசனத்துறைக்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ளோம். எங்கள் அரசை பார்த்து ராஜினாமா செய்துள்ள எச்.விஸ்வநாத், ராட்சஷ அரசு என்று கூறியுள்ளார். சிறந்த நாடாளுமன்றவாதி என்று பெயர் பெற்றவர் இவ்வாறு குறை சொன்னது ஆச்சரியம் அளித்தது.
ஆட்சி அதிகாரத்தை தக்கவைக்க நான் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தவில்லை. கோபாலய்யா எம்.எல்.ஏ. தனது குடும்பத்தில் நடந்த கொலை சம்பவத்தில் அவருக்கு பாதுகாப்பு வழங்கவில்லை என்று கூறியிருக்கிறார். சட்டவிரோதமாக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை பாதுகாக்க முடியாது.
தனியார் நகைக்கடை மீதான நிதி மோசடி வழக்கில் தொடர்புடையவரை தனி விமானத்தில் அழைத்துச் செல்ல முயற்சி செய்தது ஏன்?. முதல்-மந்திரி பதவியை மகிழ்ச்சியாக விட்டு செல்கிறேன். எனக்கு எந்த துக்கமும் இல்லை. முதல்-மந்திரியின் நிவாரண நிதியில் இருந்து ஏழை மக்களுக்கு கடந்த ஓராண்டில் ரூ.103 கோடி நிதி உதவி வழங்கியுள்ளோம்.
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க இஸ்ரேல் மாதிரி விவசாய திட்டத்தை அமல்படுத்தியுள்ளேன். விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்துள்ளேன். கடந்த ஓராண்டில் 3 முறை மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டை நடத்தி, வறட்சி நிவாரண பணிகளை துரிதப்படுத்தினோம். ராமநகர், மண்டியா, ஹாசன் ஆகிய மாவட்டங்களுக்கு சற்று கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்தது உண்மை.
எனது மகனை நாடாளுமன்ற தேர்தலில் நிற்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மண்டியாவுக்கு கூடுதல் நிதி ஒதுக்கவில்லை. நிதி ஒதுக்கியபோது அப்படி ஒரு எண்ணம் எனக்கு இருக்கவும்வில்லை. பெங்களூருவின் வளர்ச்சிக்கு ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளோம். எடியூரப்பாவும் அவ்வளவு சுலபமாக ஆட்சியை நடத்த முடியாது. மந்திரிசபையை அமைத்த ஒரே வாரத்தில் பிரச்சினை வரும். எங்கள் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கமாட்டோம்.
இவ்வாறு குமாரசாமி பேசினார்.