பா.ஜனதாவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - சட்டசபையில் சித்தராமையா பேச்சு
எம்.எல்.ஏ.க்களை வைத்து மொத்த வியாபாரம் செய்யும் பா.ஜனதாவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் சட்டசபையில் சித்தராமையா கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. இதில் சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு பேசியதாவது:-
காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுக்க ரூ.20 கோடி முதல் ரூ.30 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த பணம் பா.ஜனதாவுக்கு எங்கிருந்து வந்தது?. கர்நாடகத்தின் அரசியல் வரலாற்றில் இது ஒரு கரும்புள்ளி. இந்த ஆட்சி கவிழ்ப்பின் பின்னணியில், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவின் பின்னணியில் பா.ஜனதா உள்ளது என்பது 99 சதவீத மக்களுக்கு தெரியும்.
ஜனநாயகத்தை படுகொலை செய்துவிட்டு, ஆட்சிக்கு வருகிறீர்கள். உங்கள் மீது திருப்பி தாக்கும். எடியூரப்பா முதல்-மந்திரியானால், 6 மாதங்களோ அல்லது ஒரு வருடமோ ஆட்சியில் இருப்பார். 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தது, மொத்த வியாபாரம். எம்.எல்.ஏ.க்களை வைத்து மொத்த வியாபாரம் செய்கிறார்கள். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, இதுபோன்ற மொத்த வியாபாரத்தில் இல்லாமல் போய்விடும்.
இந்த சபையில் பா.ஜனதாவுக்கு 105 உறுப்பினர்கள் உள்ளனர். ஒரு பலமான எதிர்க்கட்சியாக அக்கட்சி செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதைவிட்டு, பின்வாசல் வழியாக ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபட்டு வந்தது. இது கண்டிக்கத்தக்கது. கட்சி தாவல் என்பது ஒரு நோய். அந்த நோயை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். கர்நாடக மக்கள் உங்களை (பா.ஜனதா) மன்னிக்கமாட்டார்கள். இதையடுத்த சட்டமன்ற தேர்தலில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.
தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக 19 எம்.எல்.ஏ.க்கள், கவர்னரிடம் நம்பிக்கை இல்லை என்று கூறி மனு கொடுத்தனர். அவர்களுக்கு எந்த கொறடா உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அவர்கள் கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாக கூறி அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். சபாநாயகரின் இந்த உத்தரவை கோர்ட்டு ஏற்றுக்கொண்டது. கட்சிக்கு எதிராக செயல்பட்டாலே அது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.