காங்கிரஸ்-பா.ஜனதாவினர் இடையே தள்ளுமுள்ளு : போலீஸ் தடியடி; 2 கட்சியினரும் கைது

சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பு முன்பு காங்கிரஸ்-பா.ஜனதாவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.போலீஸ் தடியடி நடத்தியது. 2 கட்சியினரும் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-07-23 23:33 GMT
பெங்களூரு, 

பெங்களூருவில் 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பா.ஜனதாவினரும் வந்ததால், 2 கட்சியினர் இடையே வாக்குவாதம் உண்டாகி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்திருப்பதாலும், அரசுக்கு அளித்த ஆதரவை 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் திரும்ப பெற்றதாலும் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து, முதல்-மந்திரி குமாரசாமி, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏற்கனவே பா.ஜனதாவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ள 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான நாகேஷ் மற்றும் சங்கர் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்வதற்கு வசதியாக விதானசவுதா அருகே ரேஸ் கோர்ஸ் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தனர்.

இதுபற்றி நேற்று மதியம் மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள விதானசவுதாவை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்தான் தங்கி உள்ளனர். அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள எப்படி வருகிறார்கள் என்று பார்ப்போம்,‘ என்றார்.

இந்த நிலையில், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேரும் பா.ஜனதாவுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள இருப்பது பற்றி அறிந்ததும், அவர்கள் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு காங்கிரஸ் கட்சியினர் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் மேல்-சபை உறுப்பினரான டிசோஷா தலைமையில் குடியிருப்பை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், பா.ஜனதாவுக்கு எதிராகவும், சுயேச்சை எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினார்கள். மேலும் அடுக்குமாடி குடியிருப்புக்குள் செல்லவும் காங்கிரஸ் கட்சியினர் முயன்றனர்.

இதுபற்றி அறிந்ததும் பா.ஜனதா கட்சியினர் அடுக்குமாடி குடியிருப்புக்கு திரண்டு வந்தனர். அவர்கள் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக கோஷங்கள் போட்டனர். இதனால் 2 கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் உண்டாகி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சியினரை அங்கிருந்து செல்லும்படி போலீசார் கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து செல்ல மறுத்ததுடன் தொடர்ந்து கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர்.

இதையடுத்து, காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவினர் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் 2 கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை அங்கிருந்து பஸ்களில் ஏற்றி போலீசார் அழைத்து சென்றனர்.

மேலும் அடுக்குமாடி குடியிருப்பு முன்பாக போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்