ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம் - கிராமங்களில் வளர்ச்சி பணிகள் பாதிப்பு

பணி ஓய்வு பெறும் நாளில் மாநில தலைவரை பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் கிராமங்களில் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டது.

Update: 2019-07-23 23:03 GMT
விழுப்புரம்,

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியனை பணி ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்தும், அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், அவரை பணி ஓய்வு பெற அனுமதிக்கக்கோரியும் நேற்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 22 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் பணியாற்றி வரும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவியாளர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், சாலை ஆய்வாளர்கள் என ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தை சேர்ந்த சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்கள் அனைவரும் நேற்று வழக்கம்போல் அலுவலகத்திற்கு வந்தபோதிலும் வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு பணி செய்யாமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் அனைத்தும் அலுவலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக அரசின் வீடு கட்டும் பயனாளிகளுக்கு பட்டியல் அனுமதிப்பது, கட்டுமான பணிகளுக்கு சிமெண்டு, இரும்புக்கம்பிகள் வழங்கும் பணி, குடிநீர் பிரச்சினையை சரிசெய்யும் பணி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

மேலும் செய்திகள்