பிவண்டியில் பயங்கர தீ: 3 ரசாயன குடோன்கள் எரிந்து நாசம்

பிவண்டியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 ரசாயன குடோன்கள் எரிந்து நாசமாகின.

Update: 2019-07-23 22:36 GMT
தானே, 

தானே மாவட்டம் தபோடா பகுதியில் ரசாயன குடோன்கள் உள்ளன. இந்தநிலையில், நேற்று அதிகாலை 1.50 மணியளவில் இங்குள்ள ஒரு குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

ரசாயன பொருட்கள் என்பதால் நொடிப்பொழுதில் தீ மளமளவென பரவி குடோன் முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது. அதிகளவில் கரும்புகையும் வெளியேறி கொண்டிருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் வாகனங்களில் விரைந்து வந்தனர். அதற்குள் தீ அருகில் உள்ள மேலும் 2 ரசாயன குடோன்களுக்கும் பரவியது. தீயணைப்பு படையினர் 6 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் 3 குடோன்களும் அங்கு இருந்த ரசாயன பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின.

தீயில் எரிந்த ரசாயனங்களால் அந்த பகுதி முழுவதும் ஒருவித துர்நாற்றம் வீசியது. இதனால் குடியிருப்புவாசிகள் அவதி அடைந்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்