குற்றாலம் அருவி கரைகளில் அத்துமீறும் சுற்றுலா பயணிகள் கூடுதல் போலீசாரை நிறுத்த கோரிக்கை

குற்றாலம் அருவிகளில் அத்துமீறும் சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறுகின்றனர். கூடுதல் போலீசாரை நிறுத்த சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-07-23 23:00 GMT
தென்காசி,

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டி உள்ளது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இந்த சீசனை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள். கூட்டம் அதிகமாக இருக்கும் போதும் அல்லது அருவியில் தண்ணீர் குறைவாக விழும் போதும் சுற்றுலா பயணிகளை வரிசையில் நின்று குளிக்க போலீசார் அனுமதிக்கின்றனர்.

இவ்வாறு வரிசையில் நிற்கும் பயணிகள் அனைவரும் நன்றாக குளித்து செல்கிறார்கள். குறைவான நேரம் குளித்தாலும் மகிழ்ச்சியாக குளித்து செல்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை வரிசையில் நின்று குளிக்க போலீசார் ஏற்பாடு செய்தனர். அவ்வாறு சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென சுமார் பத்து பேர் வரிசையில் நிற்காமல் முன்புறம் சென்று அருவிக்கு சென்றனர். அவர்களை போலீசார் தடுத்தபோது அவர்கள் போலீசாரை மிரட்டினர். நாங்கள் இப்படித்தான் குளிப்போம். உன்னால் என்ன செய்ய முடியும் என்று ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. போலீசாரும் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் பின்வாங்கினர். பின்னர் அவர்கள் அத்துமீறி அருவிக்கு சென்று நீண்டநேரம் குளித்து விட்டு சென்றனர்.

சுற்றுலா பயணிகள் கோரிக்கை

அங்கு பாதுகாப்பு பணியில் 4 போலீசார் மட்டுமே நிற்கிறார்கள். அவர்களால் அத்துமீறும் சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்த முடியவில்லை.

மேலும் சில உயர் பதவிகளில் இருப்பவர்கள் இங்கு வரும்போது போலீசாரை தரக்குறைவாக மிரட்டுகிறார்கள். எனவே மற்ற பகுதியில் நிற்கும் போலீசாரை விட அருவிகளில் இரவும் பகலும் அதிகமான போலீசாரை நிறுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே நேரத்தில் சுற்றுலா பயணிகள் போலீசாருக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் போலீசாருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்