சட்டக்கல்லூரி மாணவியை எரித்து கொல்ல முயற்சி: முன்னாள் காதலனை பிடிக்க தனிப்படை போலீசார் நாகை விரைந்தனர்

திருச்சியில் சட்டக்கல்லூரி மாணவியை எரித்து கொல்ல முயன்ற முன்னாள் காதலனை பிடிக்க தனிப்படை போலீசார் நாகை விரைந்துள்ளனர்.;

Update: 2019-07-23 22:15 GMT
திருச்சி,

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் அண்ணா காலனியை சேர்ந்த சுந்தரின் மகள் ரம்யா (வயது 23). இவர் திருச்சி அரசு சட்டக்கல்லூரியில் பி.எல். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். திருச்சி காஜாமலை முஸ்லிம் தெருவில் ஒரு வீட்டின் மாடியில் சக தோழிகளுடன் தங்கி கல்லூரிக்கு சென்று வருகிறார்.

ரம்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நாகை மாவட்டம் சந்திரபாடி பகுதியை சேர்ந்த தவச்செல்வன்(28) என்பவருடன் ரம்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் காதலித்து வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரிந்தனர்.

எரித்து கொல்ல முயற்சி

இந்தநிலையில் ரம்யாவை அணுகி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தவச்செல்வன் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்து வந்தார். நேற்று முன்தினம் திருச்சி வீட்டில் ரம்யா இருந்தபோது அங்கு வந்த தவச்செல்வன் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ரம்யாவை கொலை செய்யும் நோக்கத்தில் தான் பாட்டிலில் கொண்டு வந்திருந்த பெட்ரோலை ரம்யாவின் உடலில் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டார். வலியால் அலறி துடித்த அவரை தோழிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீக்காய சிகிச்சை பிரிவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நிக்சன் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே மீனவ குடும்பத்தை சேர்ந்தவரான தவச்செல்வன் நாகை மாவட்டத்தில் இருந்து கடல் மார்க்கமாக தப்பிச் சென்றிருக்கலாம் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் நாகை விரைந்தனர். அவரை பிடித்த பின்பு தான் முழு விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்