அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் 500 டாக்டர்கள் நியமனம் அமைச்சர் பேட்டி

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் 500 டாக்டர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Update: 2019-07-23 23:00 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று காலை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

கோவிலில் இருந்து வெளியே வந்த அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களின் பற்றாக்குறையை போக்க தமிழகம் முழுவதும் இதுவரை 552 டாக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். விரைவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் எம்.டி., எம்.எஸ். படித்தவர்கள் 2 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் 500 டாக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அனைத்து பணியிடங்களும் நிரப்பப்பட்டு விட்டன.

ஆஸ்திரேலியா நாட்டோடு போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் தற்போது விபத்து காய சிகிச்சை மையங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 4,301 இறப்புகள் தவிர்க்கப்பட்டு உள்ளது.

விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் ரூ.210 கோடி மதிப்பீட்டில் விபத்து காய சிகிச்சை மையங்கள் விரிவுப்படுத்த பட உள்ளது. திருவண்ணாமலை மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.2 கோடியே 30 லட்சம் மதிப்பில் விரைவில் தனி குடிநீர் திட்டம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்