தனியாக செல்லும் பெண்களை குறி வைத்து நகை பறித்த 2 வாலிபர்கள் கைது

தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து நகை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-07-23 23:00 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் கடந்த சில மாதங்களாக தனியாக நடந்து செல்பவர்களை குறிவைத்து நகை பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தன. இதை தடுக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் சார்பில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்தநிலையில் ராமநாதபுரம் ஓம்சக்திநகர் 11-வது தெருவை சேர்ந்த சரவணன் மனைவி காளஸ்வரி(வயது 35) என்பவர் தனது மகனுடன் கடைக்கு சென்றுவிட்டு பாரதிநகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் காளஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றனர்.

ஆனால் அவர் விலகியதால் அவரது கையில் வைத்திருந்த பையை பறித்து கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த காளஸ்வரி கத்தி கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து விரட்ட முயன்றனர். ஆனால் அந்த வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடிவிட்டனர். அந்த கைப்பையில் பொருட்கள் வாங்கியது போக மீதம் ரூ.500 மட்டுமே இருந்துள்ளது.

இதுகுறித்து காளஸ்வரி ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். குற்ற தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது, ராமநாதபுரம் வேல்நகர் மலைக்கோட்டையை சேர்ந்த சிவக்குமார்(22), மகாசக்திநகரை சேர்ந்த மணிகண்டன்(20) என தெரியவந்தது. இதைதொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து நகையை பறித்து வந்தது தெரியவந்தது. இதில் சிவக்குமார் மீது ஏற்கனவே 2 நகைபறிப்பு வழக்குகளும், கஞ்சா விற்பனை வழக்குகளும் உள்ளன. நகைபறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு புதுக்கோட்டை சிறையில் இருந்த நிலையில் கடந்த வாரம் ஜெயிலில் இருந்து வெளியில் வந்த சிவக்குமார், தனது நண்பருடன் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டுள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்