புதிய கல்வி கொள்கைக்கு எதிராக நடிகர் சூர்யா எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

புதிய கல்வி கொள்கைக்கு எதிராக நடிகர் சூர்யா எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2019-07-23 23:15 GMT
நாகர்கோவில்,

பா.ஜனதா 2-வது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்து உள்ளது. மீண்டும் ஆட்சிக்கு வந்த உடனேயே தேசிய கல்வி கொள்கை தொடர்பான அறிக்கையை வெளியிட்டு உள்ளனர். நாடு முழுவதும் கல்வித்துறை சந்திக்கும் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் கல்வியை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது.

தமிழகத்தில் தற்போது 50 சதவீத கல்வி நிறுவனங்கள் தனியார் வசம் உள்ளன. உயர் கல்வியில் 75 சதவீத கல்வி நிறுவனங்கள் தனியார் வசம் இருக்கின்றன. கல்வியை தனியார் மயமாக்குவது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சூர்யா எதிர்ப்பு

புதிய கல்வி கொள்கையை நடிகர் சூர்யா எதிர்த்து இருக்கிறார். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஏற்கனவே ஆதரவு தெரிவித்து உள்ளது. மத்திய அரசின் திட்டங்களை எதிர்த்தால் அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்படுவது வழக்கம். ஆனால் சூர்யா மீது இன்னும் வழக்கு தொடரப்படவில்லை.

புதிய கல்வி கொள்கை பற்றி நடிகர் சூர்யா 10 கேள்விகள் எழுப்பி இருந்தார். அந்த கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். கேரளாவில் கடந்த 3 ஆண்டுகளில் 1½ லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளியில் இருந்து அரசு கல்வி நிறுவனங்களுக்கு மாறியுள்ளனர். தமிழகத்தில் அரசு பள்ளிகள் மூடப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய கல்வி கொள்கையை நாம் ஏற்றுக்கொண்டால் இனி வரும் காலங்களில் கல்வித்துறை தொடர்பாக மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லாத நிலை ஏற்படும்.

கையெழுத்து வாங்க முடிவு

எனவே புதிய கல்வி கொள்கைக்கு எதிராக 25-ந் தேதி (நாளை) முதல் 30-ந் தேதி வரை ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்க முடிவு செய்துள்ளோம். மேலும் தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த இருக்கிறோம்.

ஏழைகளுக்கு 35 கிலோ ரேஷன் அரிசி வழங்கப்பட்டு வந்தது. இதனை 20 கிலோவாக குறைக்க திட்டமிட்டு உள்ளனர். மேலும் ரேஷன் கார்டுகளை குறைக்கவும் முயற்சி நடந்து வருகிறது. தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதை கைவிட வேண்டும்.

சி.ஐ.டி.யு. மாநாடு

குமரி மாவட்டத்தில் சி.ஐ.டி.யு. மாநில மாநாடு இந்த மாத இறுதியில் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அப்போது கட்சி தொண்டர்கள் பங்கேற்கும் ஊர்வலம் நடத்துவது வழக்கம். ஆனால் இந்த முறை ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். நாங்கள் பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் தான் ஊர்வலம் நடத்துவோம்.

எனவே ஊர்வலம் நடத்த அனுமதிக்க வேண்டும். 4 வழிச்சாலை பணி காரணமாக பல்வேறு கால்வாய்கள், குளங்கள் மண் மூடிக்கிடக்கின்றன. அவற்றை உடனே தூர்வார வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்