வெவ்வேறு சாலை விபத்துகளில் கன்டெய்னர் லாரி மோதி 2 பேர் பலி

திருவொற்றியூரில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்தில் கன்டெய்னர் லாரி மோதி 2 பேர் பலியானார்கள்.

Update: 2019-07-23 22:30 GMT

திருவொற்றியூர்,

ராயபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் வெற்றிவேல் (வயது 36). வீட்டின் அருகே இசை கற்றுக்கொடுக்கும் வகுப்பு நடத்தி வருகிறார். இவர் கடந்த 21–ந் தேதி மணலி விரைவுச்சாலையில் எம்.எப்.எல் ரவுண்டானா அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது, பின்னால் வேகமாக வந்த கன்டெய்னர் லாரி மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்தார்.

இதையடுத்து, அவரை மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் மீட்டு, சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

அதேபோல் எண்ணூர் தாழங்குப்பத்தை சேர்ந்தவர் குமார் (21). மசாலா பொருட்களை கடைகளில் கொண்டு விற்கும் வேலை செய்து வந்தார். குமார் நேற்று முன்தினம் இரவு எண்ணூர் விரைவுச்சாலையில் உள்ள மஸ்தான் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது, எதிரே வந்த கன்டெய்னர் லாரி மோதி அதே இடத்தில் பலியானார்.

இது குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து, குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்