திருவள்ளூர் அருகே விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி மாணவிகள் மறியல்; போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூர் அருகே விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி மாணவிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-23 22:45 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் அருகே கீழச்சேரி கிராமத்தில் தூயஇருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி அரசு நிதிஉதவி பெறும் பள்ளியாகும். இங்கு கீழச்சேரி, மப்பேடு, கொட்டையூர், புதுப்பட்டு, பண்ணூர், இருளஞ்சேரி, கூவம், குமாரச்சேரி, பேரம்பாக்கம் என சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 500–க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அரசு சார்பில் மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது.

பெரும்பாலான மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை. இதை அறிந்த மாணவிகள் விடுபட்ட அனைவருக்கும் மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்தை கேட்டும் அவர்கள் சரியான பதில் கூறவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த 100–க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் நேற்று காலை 8 மணியளவில் தங்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி மப்பேடு போலீஸ் நிலையம் எதிரே மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் மப்பேடு சப்–இன்ஸ்பெக்டர் பார்த்திபன், பள்ளி தலைமை ஆசிரியர், கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பள்ளி மாணவிகள் அனைவருக்கும் மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அந்த வழித்தடத்தில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்