கற்பழிப்பு வழக்கில் 3 மணி நேரம் காவலில் எடுத்து விசாரணை: ‘சிறையில் என்னை கொல்ல சதி’ கோர்ட்டில் ஆஜரான முகிலன் பரபரப்பு கோஷம்

கற்பழிப்பு வழக்கு தொடர்பாக முகிலன் 3 மணிநேரம் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார். மேலும் சிறையில் வைத்து என்னை கொல்ல சதி நடக்கிறது என்று கோர்ட்டில் ஆஜரான முகிலன் பரபரப்பு கோஷம் எழுப்பினார்.

Update: 2019-07-23 23:15 GMT
கரூர்,

ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் முகிலன் (வயது 52). கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் இருந்து ரெயிலில் புறப்பட்ட போது திடீரென காணாமல் போன இவர், திருப்பதி ரெயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டார். இதற்கிடையே முகிலன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கற்பழித்ததாக குளித்தலை அனைத்து மகளிர் போலீசில், அவருடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் பங்கேற்ற பெண் ஒருவர் புகார் கொடுத்தார்.

இந்த வழக்கு கரூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சி.பி.சி.ஐ.டி. போலீசார், காணாமல் போய் கண்டுபிடிக்கப்பட்ட முகிலனை கற்பழிப்பு வழக்கில் கைது செய்து கரூர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது 24-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே முகிலனை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டு, கரூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு எண் 1-ல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் நடந்தது. அப்போது கோர்ட்டில் ஆஜரான முகிலன் தான் சிறையில் தாக்கப்பட்டதாகவும், தான் வக்கீலுடன் கலந்து ஆலோசிக்க அனுமதிக்காமலேயே காவலில் எடுக்க அழைத்து வந்து விட்டதாகவும் கோர்ட்டில் பரபரப்பு குற்றம் சாட்டை முன்வைத்து மனுக்களை நீதிபதியிடம் சமர்ப்பித்தார். இதைத்தொடர்ந்து இதன் விசாரணையை 23-ந்தேதிக்கு (அதாவது நேற்று) ஒத்தி வைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் திருச்சி மத்திய சிறையிலிருந்து நேற்று காலை முகிலன் கரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்டார். அப்போது வேனில் இருந்து தான் அணிந்திருந்த சட்டையை கழற்றியபடியே இறங்கி நடந்து வந்த முகிலன், தாக்குதல் நடத்திய சிறைத்துறை அதிகாரிகளை கைது செய். என்னை சிறையில் வைத்து கொல்ல சதி நடக்கிறது. திடீரென தான் தவறி விழுந்து இறந்ததாக அறிவிக்கப்பட்டால் அது சதிசெயலாக தான் இருக்கும் என கூறி கோஷம் எழுப்பினார். பின்னர் அவர், கரூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு எண் 1-ல் நீதிபதி விஜய்கார்த்திக் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

பின்னர் அவரை காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பான மனு மீதான வக்கீல்கள் வாதம் நடந்தது. இதில் அரசு தரப்பில் வக்கீல் ஜெயந்தி ஆஜராகி, விதிகளை பின்பற்றி முகிலனுக்கு உரிய பாதுகாப்பு, உணவு உள்ளிட்டவை வழங்க ஏற்பாடு செய்யப்படும். எனவே போலீஸ் காவலுக்கு அவரை அழைத்து செல்ல உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தார். முகிலன் தரப்பு திருச்சியை சேர்ந்த வக்கீல் கென்னடி வாதிடுகையில், ஏற்கனவே முகிலன் சிறையில் தாக்கப்பட்டுள்ளார். எனவே அவரது பாதுகாப்பு கருதி காவலுக்கு அனுப்ப வேண்டாம் என கூறினார். இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி முடிவில், முகிலனை 3 மணி நேரம் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். மேலும் கோர்ட்டு நேரம் முடிவதற்குள் அவரை மீண்டும் இங்கு ஆஜர்படுத்தி விட்டு சிறைக்கு அழைத்து செல்ல வேண்டும் என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் மாலை 3 மணி அளவில் முகிலனை கோர்ட்டிலிருந்து அழைத்து சென்றனர். பின்னர் காந்திகிராமத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் வைத்து, அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் மீண்டும் 6.20 மணிக்கு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவதற்காக போலீசாரால் முகிலன் கோர்ட்டுக்கு அழைத்துவரப்பட்டார். அப்போது, அவர் ‘தமிழக அரசு தமிழ் இனத்தை அழிக்க நினைக்கிறது, அதற்கு வடமாநில காவல்துறை அதிகாரிகளை துணைக்கு வைத்துள்ளது என கோஷமிட்டார். பின்னர், அவர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். போலீஸ் காவலில் நடந்த விவரங்களை முகிலன் நீதிபதியிடம் தெரிவித்தார். தொடர்ந்து நீதிபதியிடம் தெரிவித்த தகவலை மனுவாக எழுதி கொடுத்தார். பின்னர் நீதிபதி, இந்த வழக்கை ஆகஸ்டு 6-ந்தேதிக்கு தள்ளி வைத்தார். அதன் பின் முகிலன் போலீஸ் வாகனத்தில் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இதைத்தொடர்ந்து முகிலனின் வக்கீல் கென்னடி நிருபர்களிடம் கூறும்போது, இந்த வழக்கில் போலீஸ் காவல் என்பது தேவையற்ற ஒன்று. அரசு தரப்பும், அரசு எந்திரங்களும் பொய்யான பிரசாரத்தை செய்வதற்காக 45 நாள் கழித்து முதல் தகவல் அறிக்கை தயார் செய்துள்ளது. யாரையோ திருப்திப்படுத்துவதற்காக இந்த போலீஸ் காவல் வழங்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம், போலீசார் கேட்ட 3 நாள் காவலுக்கு பதிலாக 3 மணி நேரம் போலீஸ் காவல் வழங்கி இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை முதலாளிகளும், இங்குள்ள ஆற்று மணலை திருடி விற்று பிழைப்பு நடத்திக்கொண்டிருப்பவர்களும் வரலாற்றில் கடன் பட்டு இருக்கிறார்கள். அவர்களின் கணக்கு சட்டரீதியாக தீர்க்கப்படும் என்றார்.

முகிலன் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, இது நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் அது தொடர்பாக தெரிவிப்பது சரியாகாது, என்றார்.

மேலும் செய்திகள்