பா.ஜனதாவை நம்பும் எம்.எல்.ஏ.க்கள் நடுரோட்டில் நிற்பார்கள் - தினேஷ் குண்டுராவ் பேட்டி

பணம், பதவி ஆசைக்காக பா.ஜனதாவை நம்பும் எம்.எல்.ஏ.க்கள் நடுரோட்டில் நிற்பார்கள் என்று காங்கிரஸ் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-22 23:41 GMT
பெங்களூரு, 

பெங்களூரு விதானசவுதாவில் நேற்று காங்கிரஸ் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது;-

கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாக பா.ஜனதாவினர் கூறுவது சரியல்ல. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா மட்டுமே செய்துள்ளனர். அவர்களது ராஜினாமாவை சபாநாயகர் ரமேஷ்குமார் இன்னும் அங்கீகரிக்கவில்லை. கடந்த 19-ந் தேதி சட்டசபையில் நடந்த விவாதத்தின் போது 22-ந் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற காங்கிரஸ் கட்சி சம்மதம் தெரிவித்திருந்தது உண்மை தான். ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிப்பது தொடர்பான விசாரணையை நாளைக்கு (அதாவது இன்று) சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதனால் தான் நம்பிக்கை வாக்கெடுப்பை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வந்த பிறகு நடத்த வேண்டும் என்று கூட்டணி கட்சி தலைவர்கள் கூறுகிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது. சபாநாயகர் ரமேஷ்குமார் கூட எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கும் உரிமை ஒவ்வொரு கட்சிக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். எங்களது உரிமையை விட்டு கொடுத்துவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது சாத்தியமில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்-மந்திரிக்கும் போதிய அவகாசம் வழங்க வேண்டும்.

ஆபரேஷன் தாமரை மூலம் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவினர் இழுத்துள்ளனர். கூட்டணி ஆட்சியை கவிழ்க்க எம்.எல்.ஏ.க்களுக்கு பணம், மந்திரி பதவி உள்ளிட்ட ஆசைகளை காட்டி ராஜினாமா செய்ய வைத்துள்ளனர். அந்த எம்.எல்.ஏ.க்கள் யாரும் சந்திக்க விடாமல் பா.ஜனதாவினர் செய்துள்ளனர்.

பா.ஜனதாவை நம்பி எம்.எல்.ஏ.க்கள் சென்றது தவறானது. பணம், பதவிக்கு ஆசைப்பட்டு பா.ஜனதாவினருடன் செல்லும் எம்.எல்.ஏ.க்கள் நடுரோட்டில் தான் நிற்பார்கள். காங்கிரஸ் கட்சிக்கு முதல்-மந்திரி பதவியை விட்டு கொடுக்க ஜனதாதளம்(எஸ்) முன்வந்திருப்பது குறித்து தற்போது எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை.

இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.

மேலும் செய்திகள்