ஆகஸ்டு 6-ந் தேதி முதல் பெஸ்ட் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த எச்சரிக்கை
மும்பையில் ஆகஸ்டு 6-ந் தேதி முதல் பெஸ்ட் பஸ் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
மும்பை,
மும்பையில் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பெஸ்ட் குழுமம் பஸ்களை இயக்கி வருகிறது. மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் இருந்தாலும் பெஸ்ட் குழுமம் தனி நிறுவனமாகவே செயல்படுகிறது. பஸ் இயக்கத்தால் நஷ்டத்தை சந்தித்து வரும் பெஸ்ட் குழுமத்தை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும். பெஸ்ட் பட்ஜெட்டை மாநகராட்சி பட்ஜெட்டுடன் சேர்த்து தாக்கல் செய்யவேண்டும், சம்பள உயர்வு வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி பெஸ்ட் குழுமத்தில் பணிபுரிந்து வரும் பஸ் ஊழியர்கள் 32 ஆயிரம் பேர் கடந்த ஜனவரி மாதம் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தனர்.
இதனால் நகரில் பஸ் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. பெஸ்ட் குழுமத்துக்கு ரூ.18 கோடியே 88 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. 9 நாட்களுக்கு பிறகு பெஸ்ட் ஊழியர்களின் இந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.
பெஸ்ட் குழுமத்திற்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட மாதந்தோறும் ரூ.100 கோடி நிதி வழங்கப்படும் என மாநகராட்சி அறிவித்தது. அண்மையில் பெஸ்ட் பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கையாக பெஸ்ட் குழுமம் அதிரடியாக பஸ் கட்டணத்தை குறைத்தது. இதன் மூலம் பெஸ்ட் பஸ்களில் அதிகளவில் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில், பெஸ்ட் பஸ் ஊழியர்கள் அடுத்த மாதம் (ஆகஸ்டு) காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரித்து உள்ளனர்.
இதுபற்றி பெஸ்ட் ஊழியர்கள் யூனியன் தலைவர் சசாங்க் ராவ் கூறியதாவது:-
கடந்த முறை பஸ் ஊழியர்கள் போராட்டத்தின் போது சம்பள உயர்வு மற்றும் பெஸ்ட் பட்ஜெட் மாநகராட்சி பட்ஜெட்டுடன் இணைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மாநகராட்சி அவற்றை நிறைவேற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களது கோரிக்கைக்காக இன்னும் காத்து கொண்டு இருக்கிறோம். எனவே மீண்டும் வருகிற ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் குதிக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.