திருச்செங்கோடு கல்வி மாவட்ட அலுவலகத்தில் அரசு ஊழியர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
திருச்செங்கோடு கல்வி மாவட்ட அலுவலகத்தில் அரசு ஊழியர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்செங்கோடு,
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள பிள்ளாநத்தம் செட்டியா கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர். இவருடைய மகன் மோகன்ராஜ் (வயது 26). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. திருச்செங்கோட்டில் உள்ள கல்வி மாவட்ட அலுவலகத்தில் மோகன்ராஜ் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று அவர் வழக்கம் போல அலுவலகத்திற்கு பணிக்கு வந்தார். பின்னர் அவர் தன்னுடைய அறையில் திடீரென விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள், ஊழியர் மோகன்ராஜை மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மோகன்ராஜ் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், நாமக்கல் கல்வி மாவட்டத்தை இரண்டாக பிரித்து திருச்செங்கோடு கல்வி மாவட்டம் பிரிக்கப்பட்டது. இதன் காரணமாக மோகன்ராஜ் அதிக பணிச்சுமையால் அவதிப்பட்டு வந்தாகவும், இதனால் விரக்தி அடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் மோகன்ராஜ் வேறு ஏதேனும் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா? என்ற கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.