நீர்வள பாதுகாப்பிற்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும் - புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம்

நீர்வள பாதுகாப்பிற்கு மத்திய அரசு கூடுதல் நிதி தரவேண்டும் என்று புதுவை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;

Update: 2019-07-22 22:30 GMT
புதுச்சேரி,

புதுவை சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் புதுச்சேரியின் நீர்வளம் பாதுகாப்பிற்கான தீர்மானத்தை முதல்-அமைச்சர் கொண்டுவந்தார். தீர்மானத்தை முன்மொழிந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

புதுவை யூனியன் பிரதேசம் 490 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளது. பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் 84 ஏரிகளும், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து பராமரிப்பில் 620 குளங்களும் உள்ளன. புதுச்சேரி பகுதி வழியாக செல்லும் தென்பெண்ணையாறு, சங்கராபரணி ஆறு, குடுவையாறு, மலட்டாறு மற்றும் பம்பையாறு ஆகியவற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி, நிலத்தடி நீர்மட்டம் உயர ஆவன செய்யப்பட்டுள்ளது.

சங்கராபரணி ஆற்றின் குறுக்கே செட்டிப்பட்டு கிராமத்தில் சுமார் 7 கோடி செலவில் ஒரு புதிய அணை கட்டப்பட்டு வருகிறது. இதே ஆற்றின் குறுக்கே செல்லிப்பட்டு மற்றும் கோனேரிகுப்பம் கிராமத்தில் 2 புதிய தடுப்பணைகள் சுமார் ரூ.40 கோடி செலவில் கட்டுவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை புத்துணர்வு அளிக்கும் திட்டத்தின்கீழ் பொதுப்பணித்துறையை சேர்ந்த 25 ஏரிகளிலும், கொம்யூன் பஞ்சாயத்தை சேர்ந்த 32 குளங்களிலும் சுமார் ரூ.16 கோடி செலவில் பணிசெய்ய மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. இதற்கு முதல் தவணையாக ரூ.3.86 கோடி மத்திய அரசால் விடுவிக்கப்பட்டு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கட்டிடங்கள், தனியார் தொழிற்சாலைகள் மற்றும் அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கவேண்டும் என்று எங்கள் அரசு வலியுறுத்தி வருகிறது.

நீரின் அத்தியாவசியமான தேவையை உணர்ந்து புதுச்சேரி அரசு கடந்த 2003-ம் ஆண்டு புதுச்சேரி நிலத்தடி நீர் (கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 2002 என்ற சட்டத்தை இந்தியாவிலேயே முதல்முறையாக அமல்படுத்தியது. இதன்படி கடற்கரையில் இருந்து 6 கி.மீ. தொலைவிற்குள் எந்த ஒரு புதிய குழாய் கிணற்றையும் அமைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நாளொன்றுக்கு 10 ஆயிரம் லிட்டருக்கு மேல் நீர் தேவைப்படும் எந்த தொழிற்சாலைக்கும் கடற்கரையில் இருந்து 6 கி.மீ. தொலைவிற்குள் அனுமதி அளிப்பதில்லை.

காரைக்கால் பகுதியில் உள்ள 4 ஏரிகளில் நல்லம்பல் ஏரி சீரமைக்கப்பட்டு நிலத்தடிநீர்மட்டம் உயர வழிவகை செய்யப்பட்டுள்ளது. மீதியுள்ள 3 ஏரிகளும் விரைவில் தூர்வார ஆவன செய்யப்படும். மேலும் காரைக்காலில் உள்ள ஆறுகளின் கடைமடை பகுதிகளில் 7 தடுப்பணைகள் கட்டப்பட்டு கடல்நீர் உட்புகாதவாறும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நீர் சார்ந்த தொழிற்சாலைகளான மினரல் வாட்டர் உற்பத்தி தொழிற்சாலைகள், குளிர்பான தொழிற்சாலைகள் ஆகியவை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமைப்பது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. நிலத்தடி நீரின் வளத்தை பாதுகாக்கும் பொருட்டும், தண்ணீர் மேலாண்மைக்காகவும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசு நிறுவனங்கள், அரசுசாரா நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தண்ணீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்தும்படியும், தண்ணீரை சேமிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் அனைவரும் ஒத்துழைக்கவேண்டும். புதுச்சேரி நீர் மேலாண்மைக்கும், நீர்வள பாதுகாப்பிற்கும் கூடுதல் நிதி வழங்க மத்திய அரசை இச்சட்டப்பேரவை கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

முடிவில் தீர்மானத்தை குரல் வாக்கெடுப்புக்கு விட்ட சபாநாயகர் சிவக்கொழுந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.

மேலும் செய்திகள்