வியாபாரிகள் சங்க வெள்ளி விழா: மாணவர்கள் சாதனை புரிந்து மாநிலத்திற்கு புகழ் சேர்க்க வேண்டும் - அமைச்சர் நமச்சிவாயம் அறிவுரை

மாணவர்கள் வல்லவர்களாகவும், ஒழுக்கம் உடையவர்களாகவும் திகழ்ந்து பல்வேறு சாதனைகள் புரிந்து மாநிலத்திற்கு பெருமையும், புகழும் சேர்க்கவேண்டும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

Update: 2019-07-21 23:30 GMT
புதுச்சேரி,

புதுவை அரியாங்குப்பம் வியாபாரிகள் மற்றும் தொழில் முனைவோர் நலச்சங்கத்தின் வெள்ளிவிழா ஏ.பி.ஆர்.கே. மகாலில் நடந்தது. விழாவை எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, அனந்தராமன் மற்றும் வெங்கட்ராமகிருஷ்ணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

வியாபாரிகள் சங்க தலைவர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராஜகோபால், மலையாளத்தார், அண்ணாமலை, கார்த்திகேயன், கண்செம்பியன், ரவி, லட்சுமணன், இளையராஜா, பன்னீர்செல்வம், முருகன், தாண்டவராயன், சங்கர், பலராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்ட ஆலோசகர் ஆனந்தன் நோக்கவுரையாற்றினார்.

விழாவையொட்டி காலையில் வியாபாரிகள் சங்கம் ஏற்பாட்டில் ஜிப்மர் மருத்துவமனை கண் சிகிச்சை பிரிவு டாக்டர்கள் சுபாஷினி, ரமேஷ் மருத்துவக்குழுவினர் தலைமையில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. அரியாங்குப்பம் மித்ரா மருத்துவமனை மற்றும் ஸ்கேன் சென்டர் டாக்டர் முத்துகுமரன் தலைமையில் இலவச ரத்தசோகை, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் நடந்தது.

மாலையில், ‘இன்றைய சூழலில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் துணையாக இருப்பவர்கள் பெற்றோர்களே? ஆசிரியர்களே? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. பட்டிமன்றத்தை முன்னாள் சபாநாயகர் சபாபதி தொடங்கிவைத்தார். பட்டிமன்றத்தின் நடுவராக வேல்முருகன் செயல்பட்டார். இதில் பெற்றோர்களே என்ற தலைப்பில் வேணுகோபால், அரங்க.முருகையன் ஆகியோரும், ஆசிரியர்களே என்ற தலைப்பில் நெய்தல் நாடன், அசோகன் ஆகியோரும் பேசினார்கள். பேராசிரியர் குழந்தைவேலனாரை பாராட்டி, நினைவு பரிசு வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து 2018-19-ம் கல்வியாண்டில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற அரசு மற்றும் தனியார் மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, அனந்தராமன் ஆகியோர் கலந்துகொண்டு 50 மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினார்கள். சங்க உறுப்பினர்களுக்கும் வெள்ளிவிழா நினைவாக சான்றிதழ் வழங்கப்பட்டது.

விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-

அரியாங்குப்பம் வியாபாரிகள் மற்றும் தொழில் முனைவோர் நலச்சங்க நிர்வாகிகள் கடந்த 25 ஆண்டுகளாக ஒற்றுமையுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த சங்கமானது வியாபாரிகளின் பிரச்சினைகளை தீர்வுகாண்பது மட்டுமின்றி பொது பிரச்சினைகளையும் கையில் எடுத்து போராடி வெற்றி கண்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் பல்வேறு சேவைகளை உயர்ந்த மனப்பான்மையுடன் செய்து வருகிறது.

சங்கத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம்களை நடத்தி உள்ளது. தற்போது மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பரிசுகளை அளிக்கிறது. இப்பணி தொடர வேண்டும்.

விழாவில் பரிசு பெறும் மாணவர்கள் வருங்காலத்தில் வல்லவர்களாகவும், ஒழுக்கம் உடையவர்களாகவும் விளங்கி மென்மேலும் பல்வேறு சாதனைகள் புரிந்து பெற்றோருக்கும், மாநிலத்திற்கு பெருமையையும், புகழையும் சேர்க்கவேண்டும். இச்சங்கம் சமூக அக்கறையுடன் செயல்படுவது பாராட்டுக்குரியது. சங்கம் வைரவிழா காண வேண்டுமென மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்