கிராம மக்களின் முன்னேற்றத்திற்கு மத்திய, மாநில அரசு திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும் - அமைச்சர் கமலக்கண்ணன் வேண்டுகோள்

கிராம மக்களின் முன்னேற்றத்திற்காக மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களை அதிகாரிகள் முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார்.

Update: 2019-07-21 23:15 GMT
காரைக்கால்,

காரைக்காலில் புதுச்சேரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், மத்திய அரசின் தீனதயாள் உபாத்யாயா கிராமின் கவுசல்ய யோஜனா மற்றும் மகிளா கிசான் யோஜனா ஆகிய திட்டங்கள் குறித்த விளக்க கூட்டம் நடைபெற்றது.

நகராட்சியின் டணால் தங்கவேல் கலையரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு, அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரபிரியங்கா, கீதா ஆனந்தன், மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா, துணை ஆட்சியர் ஆதர்ஷ், ஊரக வளர்ச்சி மேம்பாட்டுத்துறை திட்ட இயக்குனர் ரவிபிரசாத், திட்ட அதிகாரி மோகன்குமார், திட்ட பயிற்சியாளர் லட்சுமணன், காரைக்கால் வட்டார வளர்ச்சி அதிகாரி பிரேமா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் சுமார் 15 குழுக்களுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை தொழில் தொடங்குவதற்கான கடன் உதவியை அமைச்சர் கமலக்கண்ணன் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மத்திய அரசின் தீனதயாள் உபாத்யாயா கிராமின் கவுசல்ய யோஜனா மற்றும் மகிளா கிசான் யோஜனா ஆகிய திட்டங்கள், நாடெங்கும் வறுமையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டங்களின் முழு விவரத்தை அதிகாரிகள் தெரிந்து வைத்திருப்பதுடன், அதனை மக்களுக்கும் புரியவைக்க வேண்டும். அனைவரும் பயிற்சிகளை பெறவேண்டும் என்ற காரணத்தால்தான் வங்கியாளர்கள், கூட்டுறவு அமைப்பினர் என பல்வேறு தரப்பினரை அழைத்து திட்ட விளக்கக்கூட்டம் நடத்தப்படுகிறது.

நாட்டின் ஆன்மா கிராமங்களில்தான் உள்ளது என்றார் மகாத்மா காந்தி. கிராமங்களும், கிராம மக்களும் முன்னேற வேண்டுமென்றால், மத்திய-மாநில அரசு திட்டங்களை அதிகாரிகள் முழுமையாக செயல்படுத்த வேண்டும். அவ்வாறு செயல்படுத்தும்போதுதான் வெற்றி சாத்தியமாகிறது. ஒரு திட்டத்தை அரசு அமல்படுத்தும்போது, அது யாருக்காக கொண்டுவரப்பட்டதோ அவர்கள் பயனடைந்தால்தான் திட்டம் வெற்றிபெறும்.

பெண்கள், அவர்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கான புரிதல் ஏற்படவும், பயிற்சி பெறவும், பயிற்சிக்குப்பின் தொழில்களை செய்யவேண்டும் என்பதுதான் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் செயல்பாடுகளாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்