மணல் கடத்தலை தடுத்ததால் ஆத்திரம்: வாலிபரை தாக்கி வீடுகள் மீது கல்வீச்சு சிறுவன் உள்பட 3 பேர் கைது

கும்பகோணம் அருகே மணல் கடத்தலை தடுத்ததால் ஆத்திரம் அடைந்த சிலர் அதிகாரி என நினைத்து வாலிபரை தாக்கினர். மேலும் வீடுகள் மீது கல் வீசி உள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

Update: 2019-07-21 22:15 GMT
திருப்பனந்தாள்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே துகிலி காவிரி படித்துறை பகுதியில் இருந்து மணல் கடத்தப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருவிடைமருதூர் தாசில்தார் சிவக்குமார், கிராம உதவியாளர்கள் தங்க.நடராஜன், மகேஷ் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் நேற்று முன்தினம் அந்த பகுதியில் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது துகிலி படித்துறை அருகே ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் மணல் மூட்டைகளை கடத்தி செல்வது தெரியவந்தது. இதை தடுத்த அதிகாரிகள் மீது 2 பேரும் மோட்டார்சைக்கிளால் மோதி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்த 2 மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தின்போது மணல் கடத்தலில் ஈடுபட்ட நபரை அதிகாரி ஒருவர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த 9 பேர், துகிலி அக்ரகாரத்தை சேர்ந்த பிரபாகரன் (வயது35) என்பவர் தான் அதிகாரி என நினைத்து அவருடைய வீட்டுக்குள் புகுந்து தாக்கி உள்ளனர். அப்போது வீட்டில் இருந்த பிரபாகரனின் தாய் லட்சுமி, தாத்தா ராசு ஆகியோரும் தாக்கப்பட்டனர். மேலும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கத்தியை காட்டி அப்பகுதியை சேர்ந்தவர்களை மிரட்டி, தெருவில் இருந்த குடிநீர் இணைப்புகளை உடைத்து உள்ளனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளின் மீது கல்வீசி தாக்கி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக பந்தநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கோட்டூர் காலனி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (54), பிரபாகரன் (23) மற்றும் 16 வயது சிறுவன் உள்பட 9 பேர் பிரபாகரனை தாக்கி, வீடுகள் மீது கல்வீசியது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன், பிரபாகரன் மற்றும் 16 வயது சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்